×

கொளுத்தி எடுக்கும் வெயில் வேகமாக பரவி வரும் சின்னம்மை

திண்டுக்கல், மார்ச் 15: திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் அதிகரித்து வருவதால் சின்னம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 103 முதல் 104 டிகிரி வரை அடிக்கிறது. வெயில் தாங்க முடியாமலும், தண்ணீர் இல்லாததாலும் வன விலங்குகள் சிரமப்படுகின்றன. மாடுகளை பகல் 11 மணிக்கு மேல் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என கால்நடைத்துறையினர் எச்சரித்துள்ளனர்.திண்டுக்கல் நகர் மட்டுமல்லாமல் கிராமப்பகுதிகளிலும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள், சைக்கிள்களில் சென்று குடங்களில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்த தண்ணீரை காய்ச்சி குடிக்காமல் அப்படியே குடிக்கின்றனர். இதனால் தொற்று நோய்கள் ஏற்படுகிறது. கூடுதலாக வெயில் அதிகரித்துள்ளதால் சின்னம்மை நோயும் தாக்கியுள்ளது.மாவட்டத்தில் சாணார்பட்டி, செம்பட்டி, ரெட்டியார் சத்திரம், மேட்டுப்பட்டி உட்பட பல இடங்களில் சின்னம்மை பள்ளி குழந்தைகளுக்கு பரவி வருகிறது. ஒரு குழந்தைக்கு வந்தால் மறுநாள் கூடுதலாக ஐந்து குழந்தைகளுக்கு வந்து விடுகிறது.

இதனால் தேர்வு நேரத்தில் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் சின்னம்மை நோய் கண்ட குழந்தைகளை தனிமையில் அமர வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த குழந்தைக்கு விடுமுறை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். காற்றின் மூலம் இந்த நோய் பரவும் என்பதால், இவ்வாறு கல்வித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.சின்னம்மை நோய் தாக்கியவர்களுக்கு சுகாதாரத்துறையினர் ஏ சைக்கிலோமின் மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். வயதிற்கும், எடைக்கும் தகுந்தமாதிரி மாத்திரை அளவு மாறுபடும். இது உடலில் ஏற்படும் கொப்பளங்களை குறைத்து, நோய் எதிர்ப்பு தன்மையை உடலில் உண்டாக்கும்.இது குறித்து மருத்துவ இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் கூறுகையில், ‘‘சின்னம்மை நோய் வெயில் நேரத்தில் ஏற்படுகிறது. அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். நீர்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அம்மை நோய் தாக்கியவர்கள் மாத்திரைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் குடிநீரை சுட வைத்துக் குடிக்க வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு