×

முத்துப்பேட்டை ஓடக்கரை பகுதி சாலையோரத்தில் அபாய பள்ளம்

முத்துப்பேட்டை, மார்ச் 14: முத்துப்பேட்டை ஓடக்கரை பகுதியில் உள்ள சாலையோரத்தில் உள்ள அபாய பள்ளத்தை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேரூந்து நிலையத்திலிருந்து நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், செம்படவன்காடு ரயில்வே கேட் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலை ஒரு குறுகிய சாலையாகும், ஒரு காலத்தில் அகலமாக இருந்த இந்த சாலையானது நாளடைவில் சாலை இருபுறமும் ஆக்கிரமிப்புகள் பெருகியதால் சாலை குறுகிவிட்டது.இந்த சாலை வழியாக தினமும் அதிராம்பட்டினம், பாட்டுக்கோட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம் போன்ற பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பேரூந்துகள் மற்றும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் ஒரு பேரூந்து செல்வதற்கே சிரமப்படும் ஓடக்கரை பகுதி அருகே முகைதீன் பள்ளி வாசலுக்கு திரும்பும் இடம் அருகே சாலையோரத்தில் செல்லும் கழிவுநீர் வடிகாலின் மூடி சேதமாகி விட்டதால் அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யக்கோரி இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் இதுநாள்வரை அதனை சரி செய்யவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அந்த பள்ளமான பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தடுமாறி விபத்து ஏற்படாமல் இருக்க ஒரு கம்பு குச்சியில் சாக்கு கட்டி அடையாளமிட்டுள்ளனர்.இருந்தும் இதன் மூலம் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே இனியும் காலதாமதப்படுத்தாமல்  இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி நெடுஞ்சாலைதுறையினர் இந்த  பள்ளத்தை மூடி சரி செய்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பள்ளி மாணவ, மாணவிகள் போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு