×

இறால் பண்ணையை மூடக்கோரி திருவாடானையில் நாளை பொதுமக்கள் போராட்டம்

தொண்டி, மார்ச் 14: தொண்டி அருகே பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தக் கூடிய இறால் பண்ணையை மூடக்கோரி, நாளை திருவாடானையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.தொண்டி அருகே தாமோதிரன்பட்டினம் கிராம மக்கள் கிராமத்தை விட்டே வெளியேறும் சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் இறால் பண்ணையை முற்றாக அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் எவ்வித அனுமதியும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. கிராமத்தினரின் சுடுகாட்டு நிலம் இறால் பண்ணையாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கிராம மக்களின் பயனுக்காக சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் தோண்டப்பட்ட குடிதண்ணீர் கிணற்றுக்கு அருகில் பண்ணையை அமைத்துள்ளனர்.இதனால் பண்ணையின் உப்பு தன்மை கிணற்று நீருக்கும் ஏறும் வாய்ப்பு உள்ளது. இது போல் ஏராளமான சட்டவிதி மீறல்களுடன் இயங்கும் பண்ணையை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அதனால் இப்பகுதி மக்கள் கூடி கடந்த மாதம் திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு நடந்த சமாதான கூட்டத்தில் இறால் பண்ணையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். ஆனால் இன்று வரையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்காதால் நாளை ஆர்ப்பாட்டம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து கடல் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் கருணாமுர்த்தி கூறியது, பொதுமக்களை இறால் பண்ணை பாதிப்பிலிருந்து பாதுகாக்க முற்றாக இறால் பண்ணையை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் மற்றும் தாசில்தார் உட்பட அனைத்து துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்து விட்டோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இது வரையிலும் எடுக்கவில்லை.
இறால் பண்ணை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் சமரசம் செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இதை தவிர்த்து உடன் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு இறால் பண்ணையை மூடவேண்டும் என்றார்.

Tags : strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து