×

தேசிபாளையம் ஊராட்சியில் பொதுகுழாயில் தண்ணீர் திருடி தோட்டங்களுக்கு பாய்ச்சுவதாக புகார்

சத்தியமங்கலம், மார்ச் 14: பவானிசாகர் ஒன்றியத்தில் உள்ள தொப்பம்பாளையம், உத்தண்டியூர், விண்ணப்பள்ளி, பெரியகள்ளிப்பட்டி, தேசிபாளையம், நல்லூர், மாதம்பாளையம், பனையம்பள்ளி, நொச்சிக்குட்டை உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு தொட்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.பவானிசாகர்-புஞ்சைபுளியம்பட்டி சாலையில் உள்ள இரட்டை சாலை என்ற இடத்தில் இருந்து புங்கம்பள்ளி செல்லும் சாலையில் உள்ள 4 கி.மீ. தூர சாலையில் ஆங்காங்கே உள்ள குடியிருப்புகளுக்கு பொதுகுடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இக்குழாய்களில் குடம் வைத்து தண்ணீர் பிடிக்கவேண்டும் என்பது விதிமுறை. ஆனால், அப் பகுதியில் வசிப்பவர்கள் ரப்பர் குழாய்களை, பொதுகுடிநீர் குழாயில் பொருத்தி வீடுகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நேரடியாக நிரப்புவதோடு வீட்டுத்தோட்டத்தில் உள்ள வாழை மரங்கள் மற்றும் பூச்செடிகளுக்கும், விவசாய தோட்டங்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், மேடான பகுதிகளில் உள்ள காமராஜ் நகர், சுங்கக்காரன்பாளையம், பாச்சாமல்லனூர் உள்ளிட்ட கிராமங்களில் சரிவர குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  எனவே, பொதுக்குழாயில் ரப்பர் குழாய்களை பொருத்தி தண்ணீர் எடுப்பவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்