×

பிளக்ஸ் பேனருக்கு தடை விதிப்பு பிரிண்டிங் தொழில் 80 சதவீதம் பாதிப்பு

நாமக்கல், மார்ச் 14: தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து, பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிளக்ஸ் பிரிண்டிங் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சியினர் கூட்டம், திருவிழா, திருமணம், ஆண்டு விழாக்கள், சுக துக்கம் என அனைத்திற்கும் பிளக்ஸ் வைப்பது தற்போது, அன்றாட தேவையாகி விட்டது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து நீதிமன்றம் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளது. இதனால் பிளக்ஸ் பிரிண்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பிளக்ஸ் பிடிண்டிங் தயாரிக்க ஆர்டர்கள்  கிடைக்காததால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதேநிலை நீடித்தால் பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள் இத்தொழிலை கைவிடுவதாக கூறியுள்ளனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பிளக்ஸ் பிரிண்டிங் சங்கத் தலைவர் சரவணன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பிரிண்டிங் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கடைகளில் கோயில் திருவிழாக்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், வீட்டு விஷேசங்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் அடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை போன்றவற்றால் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 80 சதவீதம் பணிகள் குறைந்து விட்டது. தற்போது, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட சிலவற்றுக்கும் மட்டுமே பிளக்ஸ் பேனர்கள் தேவைப்படுவதால் அந்த பணி மட்டும் நடந்து வருகிறது. ₹25 லட்சம் வரை முதலீடு செய்து ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிலில், தற்போது ஆர்டர்கள்  வெகுவாக குறைந்து விட்டதால் பலர் வேலை இழந்துள்ளனர். இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,500 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, ஆர்டர்கள் கிடைக்காததால் சில கடைகளை மூடும் நிலைக்கு உரிமையாளர்கள் வந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் கடைகளை மூடிவிட்டு மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Blox ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் எஸ்கேவி பிளக்ஸ் கிளை திறப்பு