×

தஞ்சை நகர் கூட்டுறவு காலனியில் அம்ருத் திட்டத்தின்கீழ் பூங்கா அமைக்கும் பணி பாதியில் நிற்கும் அவலம்

தஞ்சை, மார்ச் 14: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஸ்ரீநகர் கூட்டுறவு காலனியில் அம்ருத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட பூங்கா, ஆளும்கட்சியினர் துணையோடு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஸ்ரீநகர் கூட்டுறவு காலனியில் 72 மனைப்பிரிவுகள் உள்ளது. ராஜராஜன் கூட்டுறவு வீட்டு வசதி வாரியம் மூலம் 2003ம் ஆண்டு மனைப்பிரிவுகள் போடப்பட்டது. ஸ்ரீநகர் கூட்டுறவு காலனியில் வசிப்பவர்களுக்கு என்று தனி அமைப்போ, சங்கமோ இல்லாத காலகட்டத்தில் 2010ம் ஆண்டு ஸ்ரீநகர் கூட்டுறவு காலனி குடியிருப்போர் நலச்சங்கம் ஏற்படுத்தினர். மனைப்பிரிவு ஏற்படுத்தியபோது பூங்கா அமைப்பதற்காக 27,831 சதுரஅடியை விலைக்கு வாங்கி நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு ஒப்படைப்பு செய்த பின்னர் பூங்கா அமைப்பதற்கான எவ்வித பணிகளையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து மனு கொடுத்து வந்த பின்னர் பூங்கா அமைக்கும் பணி துவங்கப்பட்டது. பிரதமரின் அம்ருத் திட்டத்தின்கீழ் 2017ம் ஆண்டு பூங்கா அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆனால் ஸ்ரீநகர் கூட்டுறவு காலனி பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இந்த பூங்கா அமைக்கும் பணி துவங்கப்பட்டது.

நகர் கூட்டுறவு காலனி மக்கள் பூங்கா அமைக்க கொடுத்த இடத்தில் அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பூங்கா அமைத்த மாநகராட்சி தற்போது ஆளும் கட்சியினர் தலையீட்டால் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டது. இதனால் இந்த பூங்கா தற்போது கார் நிறுத்தும் இடமாகவும், இரவு நேரங்களில் மதுபிரியர்கள் தங்கும் இடமாகவும் மாறிவிட்டது. குடியிருப்பு நிறைந்த பகுதியில் இப்படி ஒரு அவலம் நடப்பதை பார்த்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் பயனில்லை. இதுகுறித்து நகர் கூட்டுறவு காலனி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் முருகேசன் கூறியதாவது: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஸ்ரீநகர் கூட்டுறவு காலனியில் 72 மனைப்பிரிவுகள் உள்ளது. இந்த மனைப்பிரிவுகள் எல்லாம் கூட்டுறவு வீட்டு வசதி வாரியம் வாயிலாக போடப்பட்டது. மனைபிரிவுகள் அமையும்போது பூங்கா அவசியம் இடம் பெற வேண்டும் என்பதற்காக 72 மனைப்பிரிவுகளை சேர்ந்த உரிமையாளர்கள் 27,831 சதுர அடியை விலைக்கு நகராட்சியிடம் ஒப்படைத்தோம். இந்த இடத்தில் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் வகையில் பொது இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பூங்கா அமைக்க ரூ.5 லட்சமும் நகராட்சியிடம் வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டு முதல் எவ்வித பணியும் செய்யவில்லை. இதனால் நகராட்சியில் தொடர்ந்து மனு கொடுத்து வந்தோம். 2017ம் ஆண்டு அம்ருத் திட்டத்தின்கீழ் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாரத பிரதமரின் திட்டம் என்பதால் இந்த இடத்தில் பூங்கா சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் பூங்காவுக்கு சொந்தமான இடத்தில் 2,739 சதுர அடி நிலத்தில் எந்த ஒரு பணியையும் நடத்தாமல் ஒதுக்கி அதை தனியாருக்கு சாதகமாக விட்டுவிட்டது.

இவ்வாறு தனியாருக்கு விட்ட இடத்தின் மதிப்பு இன்றைய அரசு மதிப்பின்படி ரூ.36,42,870 ஆகும். ஏற்கனவே திட்டமிட்ட வரைபடத்தின்படி பூங்காவை அமைக்காமல் குறைந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பணியை ஆளும்கட்சியினர் பேச்சை கேட்டு கொண்டு குறைவான இடத்தில் பூங்கா அமைக்கும் பணியை துவங்கியது. ஆனால் அந்த பூங்கா பணியும் பாதியில் நின்றுவிட்டது. இந்த இடம் முழுமுழுக்க ஸ்ரீநகர் கூட்டுறவு காலனி பகுதி மக்களுக்கு தான் சொந்தம். ஏனெனில் இந்த இடத்தை வாங்கிய 72 மனைப்பிரிவின் உரிமையாளர்களும் பணம் கொடுத்துள்ளோம். அப்படியிருக்கும்போது ஸ்ரீநகர் கூட்டுறவு காலனி மக்களுக்கு பயன்படாத வகையில் பூங்காவை அமைப்பது எந்தவகையில் நியாயம். இதை மாநகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர்கள், ஆணையர் என்று எல்லோரிடமும் புகார் கூறியும் பயனில்லை. இதனால் பகல் நேரங்களில் அந்த பகுதியில் வசிப்பவர்கள் பூங்காவை கார் நிறுத்தும் இடமாகவும், இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் குடிப்பதற்கான இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர் தெரியவில்லை என்றார்.

Tags : park ,Tanjore Nagar Cooperative Colony ,
× RELATED 5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன்...