×

கஜா புயலால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க நிதியுதவி வழங்க வேண்டும் பூசாரிகள் பேரவை வலியுறுத்தல்

பட்டுக்கோட்டை, மார்ச் 14: கஜா புயலால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க நிதியுதவி வழங்க வேண்டுமென தமிழ்நாடு  கிராமக்கோயில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம கோயில் பூசாரிகள் பேரவை மாவட்ட கமிட்டி கூட்டம் நடந்தது. மாவட்ட பூசாரிகள் பேரவை அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். தஞ்சை மண்டல பூசாரிகள் பேரவை அமைப்பாளர் பாவேந்தன், மாவட்ட பூசாரிகள் பேரவை இணை அமைப்பாளர்கள் சின்னப்பா, தங்கவேல் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் ராமையன் வரவேற்றார். கிராம கோயில் பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கஜா புயலால் கிராமத்தில் உள்ள கோயில்கள்  சேதமடைந்துள்ளது. இந்த கோயில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும். கஜா புயலால் கிராம கோயில் பூசாரிகளின் வீடுகள் சேதமடைந்ததால் பசுமை இல்லம் திட்டத்தில் முன்னுரிமை கொடுத்து தமிழக அரசு வீடு கட்டி கொடுக்க வேண்டும். 60 வயது முதிர்ந்த அனைத்து பூசாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும். கிராம கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் தகுதியுள்ள அனைத்து பூசாரிகளுக்கும் நலவாரிய அட்டை வழங்க வேண்டும். நலவாரிய சலுகைகளும், மாத ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தஞ்சை மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், திருவோணம், ஒரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள், கிராம பஞ்சாயத்து அமைப்பாளர்கள் பங்கேற்றனர். திருவோணம் ஒன்றிய பூசாரிகள் பேரவை அமைப்பாளர் ரங்கன் நன்றி கூறினார்.

Tags : Powers Council ,kajah storm ,
× RELATED கஜா புயல் எதிரொலி தேர்வு ஒத்திவைப்பு