×

மாயனூர் முதல் தாயனூர் வரை பாசன வசதி பெறும் கட்டளை மேட்டுவாய்க்கால் பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கும்  கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை முழுமைக்கும் தூர்வாரப்படவில்லை விவசாயிகள் குமுறல்

கரூர், மார்ச் 14:  கட்டளை மேட்டுவாய்க்காலில் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படாததால் தேர்தலில் எதிரொலிக்கும் பிரச்னையாக மாறியுள்ளது. பொதுப்பணித்துறை திருச்சி ஆற்றுப்பாதுகாப்புக் கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள காவிரியாற்றில் தென்கரையில் பிரிந்து  மாயனூர் முதல் தாயனூர் வரை செல்லும் வாய்க்கால் முழுமைக்கும் தூர்வார வேண்டும் என்பது நிறைவேறாத கோரிக்கையாகவே இருக்கிறது. கட்டளை மேட்டுவாய்க்கால் காவிரியாற்றின் தென்கரையில் மாயனூர் எனும் இடத்தில் இருந்து காவிரி நீர் பிரிந்து சென்று தாயனூர் வரை இடது கரைக்கு நேரடி பாசன வசதி அளிக்க வேண்டும். மாயனூர் முதல் தாயனூர் வரையிலும் ஆங்கிலேயர் காலமான 1934ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு வெட்டப்பட்ட வாய்க்கால் நேரடி பாசனம் 20,550 ஏக்கர் ஆகும். நீர் விநியோகம் 411 கன அடி நீர் சென்று மொத்த பாசன பரப்பான 20,550 ஏக்கர் பாசன வசதி பெற்றது. இதன் மொத்த தூரம் 61 கிமீ. கடைமடை பகுதி என்பது 45 கி.மீ.யில் தொடங்குகிறது. 61வது கிலோ மீட்டரில் உள்ள கடைமடை பாசன நிலங்கள் நச்சலூர் ரெகுலேட்டருக்கு கீழ் உள்ளது.  நேரடி பாசன ஆயக்கட்டு நிலங்கள் தாயனூர் கடைசி வரை 16 கி.மீ. நீளத்திற்கு 10 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. இதன் காரணமாக மாயனூர் முதல் தாயனூர் வரை வாய்க்கால் முழு கொள்ளளவு திறன்கொண்ட பாசன நீரை விடமுடியவில்லை.

  முழு அளவு நீர் எடுக்க முடியாத நிலையில் வாய்க்கால் முழுமைக்கும் தூர்ந்துபோய் மண்மேடிட்டு ஆங்காங்கு மண் திட்டுகளாகவும் உள்ளது. இதனால் கடைமடை பகுதிக்கு உரிய நீர் சென்றடைய இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கடைமடை பாசன நிலங்களில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியவில்லை. ஆண்டுதோறும் நச்சலூர் ரெகுலேட்டருக்கு கீழ் உள்ள பான நிலங்களில்  ரூ.30 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.  பொருளாதார வளர்ச்சியின்றி விவசாயிகள் தவிப்பதுடன் அரசுக்கும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது.  மேலும் கட்டளை மேட்டுவாய்க்கால் தலைப்பில் மாயனூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட தலமட்ட அளவை விட குறைந்தது 2 அடி தூர்ந்து உயர்ந்துவிட்டது.  411 கனஅடி நீர் திறந்துவிட முடியவில்லை. வாய்க்காலின் ஆரம்ப இடத்தில் பல இடங்களில் வலது கரையில் மானாவாரி மேட்டுநிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதற்காக நீரேற்று பாசனத்தில் ராட்சத மோட்டார் பயன்படுத்தி வாய்க்கால் நீரை எடுக்கின்றனர். தலைப்பில் விடப்படுகின்றன, நீரை அவர்கள் எடுத்து பயன்படுத்துகின்ற காரணத்தினாலும் 45 கி.மீ. முதல் 61 கி.மீ. வரை உரிய அளவு நீரை எடுத்து சாகுபடி செய்ய இயலவில்லை. உரிய அளவு பாசன நீர் கிடைக்காததால் கடைமடை பாசன விவசாயிகள் சில ஆண்டுகளாக நேரடி பாசனம் 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய இயலாமல் அவதிப்படுகின்றனர்.  இதனைக் கருத்தில் கொண்டு முதல்வர் உடனே வாய்க்காலை முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட தலமட்ட அளவுக்கு தூர்வாரி சீரமைக்க வேண்டும்.  மேலும் நீரேற்று பாசன விவசாயிகள் ராட்சத மோட்டார் மூலமாக நீரை கிணற்றுக்குள் விட்டும் எடுக்கின்றனர்.

 இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வரலாறு காணாத அளவுக்கு காவிரியில் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடைமடை பகுதிக்கு நீர்வரவில்லை. பொதுப்பணித்துறையின் முன்எச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே இதற்கு காரணம். நீர் செல்லாத நிலங்களின் பரப்பளவை கண்டறிந்து அவர்களுக்கு தேவைப்படுகின்ற நீரின் அளவை தலைப்பில் இருந்து எடுத்து அந்த நீரையும் கணக்கிட்டு வழங்க வேண்டும். இதற்கெல்லாம் ஏதுவாக வாய்க்கால் முழுமைக்கும் தூர் எடுக்க வேண்டும். பல தடவை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுப்பணித்துறையை கவனிக்கும் முதல்வருக்கும் பல மனுக்களை அனுப்பிவிட்டோம் இருந்தும் நடவடிக்கை இல்லை. காவிரி வெள்ள நீர் கடைமடைக்கு எட்டாததை தொடர்ந்து நீர் பங்கீடு செய்ய ஐஏஎஸ் குழு அமைத்துள்ளதாக அரசு அறிவித்தது. எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. கரூர் எம்பியாக உள்ள தம்பிதுரை பாராளுமன்ற துணை சபாநாயகர் என்ற பொறுப்பை கையில் வைத்துக்கொண்டும் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார். அனைத்து மத்திய அமைச்சர்களையும் சந்திக்கும் வாய்ப்பிருந்தும், மாநில அரசு இருந்தும் எதுவும் செய்யவில்லை. நாங்கள் எதிர்க்கட்சி என சாக்குபோக்கு சொல்கிறார். எதிர்கட்சியாக இருக்கும்போதுதான் தொகுதிக்காக வாதாட முடியவும் அதையும் செய்ய தவறிவிட்டார். தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்து வரும் அதிமுக அதன் மூலம் நதிநீர் திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் வருகிற நீரைக்கூட கடைமடைக்கு கொண்டு சேர்க்க முடியாதவர்களாகத்தான் உள்ளனர். எம்பி தேர்தலின்போது விவசாயிகள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக உள்ள இந்த பிரச்னை எதிரொலிக்கும் என்று தங்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

Tags : Meynoor ,election ,
× RELATED மக்களவைத் தேர்தல் காலை 8 மணிக்கு...