×

வாகைகுளம் கோயில் விழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

அம்பை, மார்ச் 14:  அம்பை அருகே வாகைகுளம் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, தீர்த்தம் எடுத்து வருதல், தீபம் ஏந்தி வருதல், மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
அம்பை அருகே உள்ள வாகைகுளம் முத்துமாலையம்மன் கோயில் கொடை விழா, 3 நாட்கள் நடந்தது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழா நாட்களில் மூன்று வேளையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வில்லிசை, நையாண்டி மேளம், செண்டை மேளமும் நடந்தது.  விழாவின் முதல் நாளான மார்ச் 10ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், சூத்க ஹோமங்கள், மகாலெட்சுமி பூஜையை தொடர்ந்து அம்பாளுக்கு விஷேச அலங்கார தீபாராதனை, பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி சுவாமி, கோயிலில் இருந்து குடியழைப்பு பத வலம் வந்து அம்மன் கோயிலில் கொடி நிறைவு நடந்தது.  11ம் தேதி அம்மன் அருளாளர்கள் ஊர் சுற்றி வருதல், மன்னார்கோவில் விநாயகர் கோயிலில் இருந்து பெண்கள் பச்சரி தட்டில் தேங்காய் முறியில் விளக்கேற்றி முத்துமாலை அம்மன் கோயில் வரை தீப மங்கள் ஜோதி ஊர்வலம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடந்தது.

நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பொங்கலிட்டு எமதர்மராஜாவுக்கு கால பூஜை,  மதியம் 1 மணிக்கு புதுப்பானையில் கொதிக்கும் பச்சரிசி அன்னம் கஞ்சியில் தென்னம் பூக்குலையிட்டு செல்லப்பிள்ளை பத்ரகாளியம்மன், பக்தர்கள் தலையில் பூக்குலை அடித்து அம்மன் விளையாட்டு நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் மகுடம் விழா நடந்தது.  இரவு 9 மணிக்கு சிகர நிகழ்ச்சியான அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்து அவர் முன்னின்று நடத்திய பக்தர்கள் பூக்குழி இறங்கும் திருவிழா நடந்தது. இதில் சாமியாடிகள் மற்றும் விரதமிருந்த பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். தொடர்ந்து  மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர்.  நேற்று அதிகாலை ஒரு மணிக்கு பொங்கலிடுதல், 7 மணிக்கு தர்மமிடுதல நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை வாகைக்குளம் அன்புகொடி மக்கள் செய்திருந்தனர்.

Tags : devotees ,Vayayakulam Temple Festival ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி