×

ஸ்பிக்நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் வெயிலில் காயும் பயணிகள்

ஸ்பிக் நகர், மார்ச் 14: ஸ்பிக் நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் காத்திருந்து அவதிக்குள்ளாகின்றனர். இங்கு பயணிகள் நிழற்குடை அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி அடுத்துள்ள முள்ளக்காடு, அபிராமி நகர், ராஜிவ் நகர், சவேரியார்புரம், தங்கமணி நகர், குமாரசாமி நகர், ஸ்பிக் நகர், கீதா நகர், சுந்தர் நகர், சாந்தி நகர், பாரதி நகர், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், தங்கமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் ஸ்பிக் நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தான் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். சுற்று வட்டார பகுதிகளில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லக்கூடிய ஒரே பேருந்து நிறுத்தம் இதுவாகும். இப்பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பிக் நகர் சாலையின் இருபுறமும் இருந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. தற்போது சாலை பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையிலும், பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலில் காய்ந்தபடி பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். பொதுமக்கள் அவதிப்படுவதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், தென்னங்கீற்றால் தற்காலிக கூரை அமைத்துள்ளனர். இதில்தான் முதியோர், பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் பஸ்சுக்கு காத்திருந்து பஸ் ஏறிச் செல்கின்றனர்.  எனவே, ஸ்பிக் நகர் பஸ் நிறுத்தத்தின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,bus stand ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை