×

அதிகாரிகள் மெத்தனத்தால் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் மதுராந்தகம் நகராட்சி

மதுராந்தகம், மார்ச் 14: அதிகாரிகள் மெத்தனத்தால் மதுராந்தகம் நகராட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். சுகாதார திட்டத்தில், மதுராந்தகம் நகராட்சி மாநில அளவில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தரவரிசை பட்டியலில் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநில அளவில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவைகளின் சுகாதார மேம்பாடுகள் கணக்கெடுப்பு செய்து ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியலை வெளியிடப்படுகிறது. அதன்படி, தூய்மை இந்தியா 2019ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டு பட்டியலில் 10வது இடத்தில் தேர்ச்சி பெற்று, சுகாதாரத்தில் முக்கிய இடத்தை பெற்ற மதுராந்தகம் நகராட்சி, இந்தாண்டு, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 253வது இடத்துக்கு பின் சென்றுள்ளது. அதேபோன்று அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி கடந்த ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநில அளவில் 23வது  இடத்தைபெற்று, முன்னிலையில் இருந்தது. ஆனால் தற்போதைய அறிவிப்பின்படி அந்த பேரூராட்சி, 218வது இடத்துக்கு சென்றுள்ளது.
கடந்த ஆண்டு மாநில அளவில் 447வது இடத்தில் இருந்த கருங்குழி பேரூராட்சி , சுகாதார திட்ட செயல்பாடுகளை தீவிரப்படுத்தியதால், தற்போது 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து  சமூக ஆர்வலர்கள்  கூறுகையில், மதுராந்தகம் நகராட்சியில் மீன் கடைகளுக்கு தனியாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் மீன் கடைகள் அந்த இடத்தில் வைக்காமல், பொதுமக்கள் அதிகமாக சென்று வரும் மதுராந்தகம் சூனாம்பேடு சாலையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் கெட்டுப்போன மீன்கள் வீசப்பட்டு கடும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதேபோல், பல பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் தொடர்வதால், மாநில அளவிலான பட்டியலில் மதுராந்தகம் நகராட்சி மிகவும் பின்தங்கிவிட்டது என்றனர்.

Tags : Municipality of Madurantham ,
× RELATED கடந்த ஆண்டை விட 30 சதவீதம் விற்பனை...