×

சேரகுளம் அருகே மரநாய்களால் பருத்தி பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை


செய்துங்கநல்லூர், மார்ச் 14: சேரகுளம் அடுத்துள்ள தீராத்திகுளம் கிராமம். வறட்சி மிகுந்ததும், வானம்  பார்த்த பூமியாகவும் திகழும் இங்குள்ள விளைநிலங்கள் மணிமுத்தாறு பாசனம் மூலம் பாசனம் பெறுகின்றன. தற்போது  கிணற்றுப்பாசனம் வாயிலாக பல்வேறு நிலங்களில் விவசாயம் நடந்து வருகிறது. குறிப்பாக சுமார் 100  ஏக்கர் பாசனத்தில் வேளாண் சாகுபடி நடந்து வருகிறது. இதில் பால்பாண்டி  என்பவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பருத்தி பயிரிட்டு வளர்த்து வந்தார். நேற்று  முன்தினம் நிலத்திற்கு சென்றபோது  அங்கு வந்த மரநாய்களால் பருத்தி மற்றும் பூ,  இளம்காய்களை வெட்டி துண்டுகளாக போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதே போல் இப்பகுதியில் பல்வேறு நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி பயிர்களை மரநாய்கள் சேதப்படுத்தி சென்றதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் கவலையில் உள்ளனர்.
 இதுகுறித்து பால்பாண்டி கூறுகையில், ‘‘முதலில் யாரோ வேண்டாதவர், பயிர்களை வெட்டி நாசம் செய்ததாக எண்ணினேன். ஆனால், பின்னர்தான் மரநாய்களால் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. பனைமரங்களில் வசித்து வரும் மரநாய்கள், இரவு வேளைகளில் கூட்டமாக  வந்து பருத்தி பயிர்களை நாசம் செய்து சென்றுள்ளன. இதனால்  எனது நிலத்தில் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்திருந்த பருத்தி பயிர்கள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகிவிட்டன. பயிர்களை விஷ  வண்டுகள் தாக்கினால் மருந்து அடிக்கலாம். ஆடு மேயாமல் இருக்க வேலியும் அமைக்கலாம். ஆனால், மரநாய்களிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற என்ன செய்யவது என்றே தெரியவில்லை. மரநாய்கள் கூட்டத்தின் அட்டகாசத்தால் வயலில் பயிரிட்ட  பருத்தி காய் முழுவதும் நாசமாகி விட்டது’’  என்றார்.  இதேபோல் கூட்டமாக வந்த மரநாய்கள் தாக்குதலால் பருத்தி சாகுபடி முற்றிலும் நாசமாகிவிட்டதால் விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர்.

Tags : Cherukulam ,
× RELATED சேரகுளம் அருகே வாலிபர் வெட்டி கொல்லப்பட்டது ஏன்?