×

முன்னாள் அமைச்சர் மகனுக்கு 7 ஆண்டு சிறை

சென்னை, மார்ச் 14: சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கடந்த 8.9.2016 - 8.10.2016 ஆகிய 30 நாட்களில் ₹78 கோடி வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறைக்கு தகவல் வந்தது. அதன்படி, பணம் மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனுக்கு (43). இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதும், வெளிநாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதாக போலி பில்களை தயாரித்து, ஒரே வங்கியில் இருந்து 8 வங்கி கணக்கில் வெளிநாடுகளுக்கு ₹78 கோடி பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது. அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் மணி அன்பழகனை கடந்த 1.4.2017 அன்று கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி வசந்தி முன்னிலையில் நடந்தது. அதில் அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், சாட்சிகளிடம் நடத்திய விசாரணையிலும், ஆவணங்களை பார்த்ததிலும் மணி அன்பழகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே 7 ஆண்டு சிறை தண்டனையும், ₹1 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் ₹1 கோடி செலுத்தாத பட்சத்தில் மேலும்  1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து மணி அன்பழகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...