×

சவாரிக்கு அழைத்து கால்டாக்சி கடத்தல்

சென்னை, மார்ச் 14: சவாரிக்கு சென்ற கால்டாக்சியை கடத்திய மர்மநபரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை, பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (30). கால்டாக்சி டிரைவர். இவரது கால் டாக்சிக்கு பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் இருந்து அரக்கோணம் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சவாரி பதிவானது. இதையடுத்து சதாம் உசேன், காருடன் அங்கு சென்றார். அப்போது ஒரு வாலிபர், காரில் ஏறி அரக்கோணம் செல்ல வேண்டும் என கூறினார். அதன்படி, கார் அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர கடையில் தண்ணீர் வாங்கி வரும்படி டிரைவர் சதாம் உசேனிடம், அந்த வாலிபர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, தண்ணீர் வாங்க கடைக்கு சென்றார். அப்போது, காரில் இருந்த வாலிபர், திடீரென காரை எடுத்து கொண்டு வேகமாக சென்றுவிட்டார். இதை பார்த்த டிரைவர் சதாம்உசேன் அதிர்ச்சியடைந்து, கூச்சலிட்டார். ஆனால், கார் மின்னல் வேகத்தில் பறந்தது. இதுகுறித்து சதாம்உசேன், மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கால்டாக்சி நிறுவனத்தில் பதிவான செல்போன் நம்பரை வைத்து, காரை கடத்தி சென்ற வாலிபர் யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Caldaxi ,kidnapping ,
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது