×

கிராமப்புறங்களில் நீர்நிலைகள் வறண்டதால் வேலை இல்லாமல் பெண்கள் தவிப்பு

திருவள்ளூர், மார்ச் 14: வரலாறு காணாத வறட்சியால், வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர். ஆடு, மாடு, வாத்துகளை வைத்து அதன்மூலம் வருமானம் பார்த்த பெண்களும், தண்ணீரின்றி மேய்ச்சலுக்கு அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் தொடங்கியுள்ளதால் கட்சியினர், அழைக்கும் கூட்டங்களை எதிர்பார்த்து காத்துள்ளனர். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், விவசாயமின்றி கிராமங்களில் வறட்சி நிலவுகிறது. தண்ணீருக்காக பல கி.மீட்டர் தூரம் குடங்களுடன் அலைகின்றனர். கிராமப்புற பெண்களின், வறட்சியை போக்கும் வரப்பிரசாதமாக தற்போது நூறுநாள் வேலை திட்டம் மட்டுமே உள்ளது. விவசாய காலங்களில், விவசாய பணிக்கும், மற்ற நாட்களில், நூறுநாள் திட்ட பணிக்கும் சென்று வந்தனர். கடந்த 2012ல் ஏற்பட்ட வறட்சியை தொடர்ந்து, கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்காக, இந்த வேலை திட்டம், 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டது.2013ல் வறட்சி அதிகரித்தபோதும், இந்த வேலை நாட்கள் அதிகரிக்கப்படவில்லை. ஏற்கனவே விவசாயம் இல்லாததால், விவசாய நாட்களில், இந்த வேலையை பெரும்பாலானோர் செய்து முடித்து விட்டனர்.

தற்போது ஏழை பெண்கள், வருமானத்துக்காக ஆடு, மாடு மற்றும் வாத்துகளை வாங்கி மேய்த்து, அதன்மூலம் வருமானம் பார்த்து வந்தனர். இந்நிலையில், வறட்சியால் ஏரி, குளங்களில் தண்ணீரின்றி முற்றிலும் வறண்டுள்ளது. இதனால், அதையும் மேய்க்க இடமின்றி பல கி.மீட்டர் தூரம் அலைந்து வருகின்றனர். இவ்வாறு எந்தவித வருமானமுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கிராமப்புற பெண் ஒருவர் கூறுகையில், ‘ஆண்கள் சம்பாதிக்கும் வருமானத்தில் பெரும்பகுதி டாஸ்மாக் மூலம், மீண்டும் அரசுக்கே செல்கிறது. குடும்பத்தை நடத்த வேண்டிய பொறுப்பு பெண்களிடத்தில் உள்ளது. வேறு வேலை இல்லாததால், தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் அழைக்கும் கூட்டங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சாப்பாட்டு செலவுக்கு கட்சியினர் ரூ.100 கொடுத்தால், அதை வைத்து காய்கறி வாங்கி விடலாம்’’’’ என்றார்.

Tags : Women ,areas ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது