×

அழகரசன் நகரில் அடுக்குமாடி கட்டுமான பணி மந்தம்

ஈரோடு, மார்ச் 12: ஈரோடு கருங்கல்பாளையம் அழகரசன் நகரில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.99.09 கோடி மதிப்பீட்டில் 272 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிகள் மந்த கதியில் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஈரோடு மாநகரில் ஓடை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக கருங்கல்பாளையம் அழகரசன்நகர், பெரியார்நகர், மரப்பாலம், அன்னை சத்யாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனநிலையில் இதில் பெரும்பாலான வீடுகள் இடிந்து போனது.இதில் பெரியார்நகர், அன்னை சத்யாநகர், அழகரசன்நகர் ஆகிய பகுதிகளில் பழுதடைந்த நிலையில் இருந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதில் அன்னை சத்யாநகர் பகுதியில் குடியிருப்பு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு மின் இணைப்பிற்கான பணிகள் நடைபெறவுள்ளது. கருங்கல்பாளையம் அழகரசன் நகர் பகுதியில் கடந்த 2017ம்ஆண்டு ரூ.99.09 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இதில் தரைதளம் மற்றும் மூன்று தளங்கள் என 272 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை வரும் மே 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தற்போது வீடுகள் கட்டுமான பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. இதுவரை 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகளை விரைந்து முடித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அழகரசன்நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் எங்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் பழுதடைந்த நிலையில், அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவித்தார்கள். மேலும் வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டு எங்களுக்கு வீட்டிற்கு 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெளியேற்றினார்கள். வீடுகளை காலி செய்து 2 ஆண்டிற்குள் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆனநிலையில் இதுவரை கட்டுமான பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. நாங்கள் தற்போது வெளிப்பகுதியில் 4 ஆயிரம், 5 ஆயிரம் வாடகைக்கு குடியிருந்து இருந்து வருகிறோம். கூலி வேலைக்கு சென்று வரும் எங்களால் இந்த வாடகையை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இந்த குடியிருப்பு பணிகள் வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விடும் என்று கூறுகிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும். ஏற்கனவே அங்கு குடியிருந்த பயனாளிகளுக்கு அவர்களுக்குரிய வீடுகளை ஒதுக்கி தர வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை