×

அறந்தாங்கி, ஆலங்குடியிலிருந்து அரிமளம், திருமயம் வழியாக மதுரைக்கு அரசு பஸ் வசதி பொதுமக்கள் கோரிக்கை

திருமயம், மார்ச் 12: அறந்தாங்கி, ஆலங்குடியில் இருந்து அரிமளம், திருமயம் வழியாக மதுரைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம், பேரூராட்சியாகவும் உள்ளது. அரிமளம் பகுதிகளில் உள்ள பள்ளி, அரசு, தனியார் அலுவலகங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போது அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி,  ராயவரம், கறம்பக்குடி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரிமளத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் விவசாய பொருட்களை விற்க, வாங்க மற்றும் வெளி ஊர்களுக்கு செல்ல பஸ் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரிமளம் வழியாக மதுரைக்கு பஸ் இல்லாததால் மதுரை மார்க்கம் செல்ல விரும்பும் பயணிகள் பஸ் ஏற அரிமளத்தில் இருந்து கே.புதுப்பட்டி, திருமயம், புதுக்கோட்டை செல்கின்றனர்.

இதனால்  மக்களுக்கு பணம், நேரம் விரையமாகிறது. எனவே தற்போது அறந்தாங்கியில் இருந்து கே.புதுப்பட்டி, கரைக்குடி வழியாக மதுரை செல்லும் அரசு பஸ் அரிமளம் வழியாக இயக்கினால் அரிமளம், ராயவரம், கடியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் வணிகம் மேம்பாடு அடைவதால் வாழ்க்கை தரம், பொருளாதாரம் முன்றே வாய்ப்புள்ளது. அறந்தாங்கியில் இருந்து கரைக்குடி வழியாகவும், அரிமளம் வழியாகவும் மதுரைக்கு செல்லும் தூரம் சமமாக உள்ளது.

இதனால் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி மார்க்கத்தில் இருந்து மதுரை மார்க்கம் செல்லும் பயணிகள் அரிமளம் வழியை பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் முதல் கட்டமாக மதுரைக்கு அரிமளம் வழியாக ஒரு நாளைக்கு மூன்று நேரம் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் மக்களின் வரவேற்புக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என அரிமளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் ஆலங்குடியில் இருந்து அரிமளம் வழியாக மதுரைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரிமளம் பகுதி மக்களிடையே உள்ளது.

Tags : Government bus facility ,Aranthangi ,Madurai ,Alangudi ,Arumalam ,Thirumayam ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு