×

கிராம உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியதில் முறைகேடு அரசு அதிகாரிகள் மெத்தனம்

கொள்ளிடம், மார்ச் 12: நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதியில் கிராம உதவியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. நேர்முக தேர்வுக்கான மாதமும் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் 21 கிராம உதவியாளார் பணியிடங்கள் காலியாக இருந்ததால் இப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி சீர்காழி தாசில்தார் அலுவலகம் மூலம் விளம்பர அறிவிப்பு வெளியாகியிருந்தது. கொள்ளிடம் ஒன்றியத்தில் மட்டும் 11 காலியிடங்களும்,  சீர்காழி  ஒன்றியத்தில் 10 காலியிடங்களும் இருந்தன. இதற்கான கல்வித்தகுதி 5 முதல் 8ம் வகுப்பு வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 900 பேர் இப்பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சீர்காழி தாசில்தார் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட நியமன ஆணையின்படி 19 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் விதிக்கு புறம்பாக பட்டதாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுக மாவட்ட பிரதிநிதி அங்குதன் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜானகிராஜதுரை ஆகியோர் ஊராட்சி உதவியாளர்கள் பணி நியமனம் பாரப்பட்சமாகவும் விதிக்கு புறம்பாகவும், வசதிபடைத்தவர்களிடம் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாகவும், இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது.  என்றும் அதற்கு சான்றாக பிப்ரவரி 14ம் தேதி சீர்காழி தாசில்தார் அலுவலகத்திலிருந்து வெளியிட்ட நியமன ஆணையில் நேர்முகத்தேர்வு நடைபெற்ற தேதி 25.02.2019, 28.05.2019 மற்றும் 29.02.2019 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நேர்முகத்தேர்வின் அடிப்படையிலும் என்று 28.02.2019 என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 28.05.2019 என்று மாதம் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் 28ம் தேதியுடன் மாதம்
முடிவடைகிறது.

ஆனால் 29.02.19 என்றும் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.   முதலில்  வெளியிடப்பட்ட  ஆணையின் இறுதியில் தாசில்தார் கையொப்பம் மட்டும் உள்ளது. இந்த பணி ஆணை சம்மந்தமாக கலெக்டரிடம்  சிலர் புகார் மனு தெரிவித்தனர். இந்நிலையில் பிப்ரவரி 14ம் தேதி நியமன ஆணை வெளியிட்டு 19 கிராம உதவியாளார்கள் நியமனம் செய்யப்பட்ட பிறகு சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக மார்ச் மாதம் கடந்த 7ம் தேதி மறு நியமன ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாதம் மட்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதிலும்  29ம் தேதி என்று தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணையின்  இறுதியில் வருவாய் ஆய்வாளர் சரிபார்த்தற்கான கையொப்பமும், தாசில்தார் கையொப்பமும்  இடம் பெற்றுள்ளது. எனவே  இந்த பணி நியமன ஆணை வழங்கியதிலும்  நடைபெற்ற முறைகேடு குறித்து  விசாரணை செய்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக  மாவட்ட பிரதிநிதியும் விவசாய  சங்கத் தலைவருமான அங்குதன் தெரிவித்தார்.

Tags : government officials ,village assistants ,
× RELATED தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி