×

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததால் 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் செம்பனார்கோவில் அருகே பரபரப்பு

செம்பனார்கோவில், மார்ச் 12: பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததால் 3 கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட நரசிங்கநத்தம், மேமாத்தூர், ஈச்சங்குடி ஆகிய 3 ஊராட்சிகளுக்கு உட்பட்ட வாழ்கை, காசான்தட்டை, கண்டியன்கடலி, குருஸ்தானம், வள்ளுவப்புள்ளி, தியாகராஜநல்லூர், ஈசங்குடி, கடலி, பிள்ளாவிடந்தை, கருப்பூர் உட்பட 14 கிராமங்களுக்கு கடந்த 2016-17ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத்தொகை பாதி நபர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பிரச்னை அப்படியே கிடப்பில் உள்ளது.  இந்நிலையில் 2017-18ம் ஆண்டிற்காக மேமாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட பகுதியில் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்காப்பீடு செய்துள்ளனர். அவர்களில் தற்போது 130 நபர்களுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை வழங்க அனுமதி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நரசிங்கநத்தம், மேமாத்தூர், ஈச்சங்குடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்று (12ம் தேதி) மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு அதற்காக விவசாயிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதனை அறிந்த கூட்டுறவு வங்கி நிர்வாகம் நேற்று ஈச்சங்குடியை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்காப்பீடுத்தொகை நேற்று(11ம்தேதி) வழங்கப்படுகிறது என்று அறிவித்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த 3 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் தட்சிணாமூர்த்தி தலைமையில் மேமாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஒருசிலருக்கு மட்டும் காப்பீட்டுத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதை எந்த விவசாயிகளும் பெறக்கூடாது, அனைருக்கும் வழங்கினால் மட்டுமே காப்பீட்டுத்தொகையை பெறவேண்டும் என்று வலியுறுத்தி செம்பனார்கோவில்-நல்லாடை மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை அடுத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் செம்பனார்கோவில்- காரைக்கால் சாலையில் போக்குவரத்து சாலை 3 மணி நேரம் பாதிப்படைந்தது. இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sembanarko ,
× RELATED செம்பனார்கோவில் வட்டாரத்தில் காய்கறிகள் பயிரிட தோட்டக்கலை அழைப்பு