×

அம்மன்கோயில் நேர்த்திக்கடனுக்கு தயாராகும் அழகு பொம்மைகள் திருவில்லிபுத்தூர் தம்பதி அசத்தல்

திருவில்லிபுத்தூர், மார்ச் 12: அம்மன்கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விதவிதமான பொம்மைகளை திருவில்லிபுத்தூர் தம்பதி தயாரித்து வருகின்றனர். தமிழகத்தில் பங்குனி மாதம் ஊர்தோறும் மாரியம்மன், காளியம்மன் மற்றும் அம்மன் கோயில்களில் திருவிழா நடக்கும். விருதுநகர் மாவட்டத்திலும் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் விமரிசையாக நடக்கும். இந்த திருவிழாக்களில் நேர்த்திக்கடன் நிறைவேறும் பக்தர்கள் பொம்மைகளை வாங்கி நேர்த்திக் கடன் செலுத்துவர். இந்நிலையில், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் கோயில் நேர்த்திக்கடனுக்கு தேவையான குழந்தை பொம்மைகள், தொட்டில் பொம்மைகள், வீடு அமைப்பு போன்ற பொம்மைகளை தயாரித்து வருகின்றனர். இது குறித்து பொம்மை தயாரிக்கும் திருவில்லிபுத்தூர் மாதா நகரைச் சேர்ந்த சின்ன ராமசாமி (52), அவரது மனைவி பேச்சியம்மாள் (50) ஆகியோர் கூறியதாவது: சுமார் 15 ஆண்டுகளாக நேர்த்திக் கடன் பொம்மைகளை தயாரித்துக் கொடுக்கிறோம். கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தும் பொம்மைகளை பொதுமக்கள் விரதமிருந்து மாசி மாதமே எங்களுக்கு ஆர்டர் கொடுப்பர். குழந்தை இல்லாதவர்கள் தவழும் குழந்தை பொம்மைகளையும், திருமண நேர்த்திக்கடனுக்கு ஜோடி பொம்மைகளையும், நான்கு வயது அல்லது 5 வயது குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் பெரிய குழந்தை பொம்மைகளையும், தொட்டில் குழந்தை பொம்மைகளையும், வீடு கட்ட நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் வீடு போன்றும் ஆர்டர் கொடுப்பர்.

இது தவிர கை, கால் குணமான உடன், அந்த உறுப்புகள் பொம்மைகள் செய்து கொடுக்கிறோம். ஆண்டுக்கு 3 மாதம் மட்டுமே இந்த தொழில் செய்கிறோம். பங்குனி மாதம் திருவிழாக்களில் நேர்த்திக்கடனை செலுத்தி விதமாக   எங்களுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். ஆர்டரை பொறுத்து பொம்மை தயார் செய்கிறோம். பொம்மைகளை தயார் செய்து, அவைகளை காயவைத்து, வண்ணம் தீட்டி மெருகேற்றுகிறோம். ஆண்டுதோறும் பங்குனி மாதங்களில், மாரியம்மன் காளியம்மன் கோயில் விழாக்களில் நேர்த்திக்கடனை செலுத்த பொம்மைகளை செய்ய ஆர்டர் கொடுப்பார்கள். பொம்மைகளை விரதம் இருந்து செய்கிறோம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் நேர்த்திக்கடன் பொம்மைகளை செய்து கொடுக்கிறோம். மாவட்டத்திலேயே குறிப்பிட்ட சிலர்தான் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பொம்மை தயாரிக்கும் காலங்கள் தவிர மற்றநேரங்களில் கூலி வேலை செய்து பிழைக்கிறோம். இந்த தொழிலை மேம்படுத்த அரசு உதவ வேண்டும். இந்தாண்டு இதுவரை 3,000 பொம்மைகள் ஆர்டர் கிடைத்துள்ளன’ என்றார்.

Tags : Ammanankovu ,siblings ,
× RELATED அண்ணா-கலைஞர் ஓய்வுகொள்ளும் இடங்கள்...