×

2 ஆண்டுகளுக்கு பின் இறுதி கட்டத்தில் குச்சனூர் பாலப்பணி

சின்னமனூர், மார்ச் 12: கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் குச்சனூர் பாலப்பணி நிறைவடையும் நிலையை அடைந்துள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி கிராமம் உள்ளது. குச்சனூரிலிருந்து  3 கி.மீ தொலையில் மேலபூலாநந்தபுரம் மற்றும் சீலையம்பட்டி இருக்கிறது. இந்த ஊர்களின் இடையில் முல்லை பெரியாறு ஓடுகிறது. அந்த ஆற்றுக்குள் முக்கால் கி.மீ வரை சீலையம்பட்டி நீண்ட தடுப்பணை இருக்கிறது. இந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்வெளிகள் இருப்பதால், ஆண்டுக்கு இருபோகம் நெல் சாகுபடி விவசாயம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் இந்த ஊர்களின் விவசாயிகளுக்கு ஊர்களிலும் மாறி மாறி வயல்கள் இருப்பதால் இரு கிராம மக்களும் சின்னமனூர் சுற்றி வந்து திரும்புகின்றனர். இவர்களின் அலைச்சலை தடுக்கும் விதமாக குச்சனூரிலிருந்து ஆற்றின் குறுக்கே கல்பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். அத்துடன் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரபகவான் கோயிலுக்கும் சுற்றாமல் சென்று வணங்கி வந்தனர். இந்நிலையில் 1998ம் ஆண்டு முல்லை பெரியாற்றில் ஏற்பட்ட காட்டாறு வெள்ளத்தில்  கல்பாலம் வீழ்ந்தது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல்  விவசாயிகளும், பொதுமக்களும் பாதிப்பு அடைந்தனர். இதனால் விவசாயிகள் மீண்டும் சின்னமனூரைச் சுற்றியே வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் புதுப்பாலம் கட்டி தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பாக ரூ.6.40 கோடி செலவில் கல்பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டுமான பணிகள் துவங்கியது. ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போதும், மழைக்காலங்களில் கூடுதலான தண்ணீர் வருவதாலும் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது ஒரு வழியாக பாலம் கட்டுமானப்பணி   இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kuchanur Palai ,
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...