×

வெளிநாட்டு வேலைக்கு சென்ற மகளை மீட்டு தர வேண்டும்

ராமநாதபுரம், மார்ச் 12: குடும்ப வறுமையால் வெளிநாட்டு வேலைக்கு சென்று மாயமான மகளை மீட்டு தர வேண்டும் என்று அவரது தந்தை கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார். கடலாடி தாலுகா கடம்பங்குளத்தை சேர்ந்த சிவப்பெருமாள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘எனது மகள் லிங்கமுத்து(40) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவண்ணாமலையை சேர்ந்த குமரவேல் என்பவர் மூலமாக குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்றார். வேலைக்கு சென்ற ஒரு மாதம் மட்டுமே தொடர்பில் இருந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. எனது மகள் என்ன ஆனார் என தெரியவில்லை. இது தொடர்பாக ஏஜெண்ட் குமரவேலை தொடர்பு கொண்டதற்கு  ரூ.5லட்சம் தரவேண்டும் என்கிறார்.

குவைத் நாட்டில் இருக்கும் உறவினர்கள் மூலம் எனது மகள் வேலை பார்க்கும் இடத்தில் விசாரித்த போது அனுப்பி வைத்த ஏஜெண்ட் கொத்தடிமையாக விற்று பணம் பெற்று விட்டதாகவும், பணத்தை திருப்பி கொடுத்தால் இந்தியா அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளனர். வீட்டு வேலைக்கு என கூறி வெளிநாடுக்கு அனுப்பி வைத்த நிலையில் கொத்தடிமையாக எனது மகளை விற்றுள்ளனர். மேலும் உடல் நலக்குறைவால் ஒரு அறையில் அடைத்து வைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். கலெக்டர் எனது மகளை மீட்டு தரவேண்டும்’ என்று மனுவில் தெரிவித்துள்ளார். லிங்கமுத்துவின் மகள்கள் கூறுகையில், எனது அப்பா பழனி உடல் நிலை சரியில்லாத நிலையில், எங்களை காப்பாற்ற வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு அம்மா லிங்க முத்து சென்றார். இரண்டு மாதமாக அம்மா பற்றி எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளது. அப்பா சரியில்லாத நிலையில் பாட்டி வீட்டில் வசிக்கிறோம். கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களது அம்மாவை மீட்டுதரவேண்டும் என தெரிவித்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை