×

சின்னக்குளம்-நாகணம்பட்டி இடையே 3 மாதமாக நிற்கும் தார்ச்சாலை பணி

ஒட்டன்சத்திரம், மார்ச் 12: சின்னக்குளம்-நாகணம்பட்டி இடையே தார்ச்சாலை அமைக்கும் பணி 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் இருந்து நாகணம்பட்டி செல்வதற்காக சின்னக்குளம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இச்சாலை வழியாக நாகணம்பட்டி, சங்குப்பிள்ளைப்புதூர், கொல்லபட்டி, கே.கே.நகர், திண்டுக்கல்-பழனி சாலைக்கு செல்லலாம். பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்காகவும், போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் செல்லவும் இப்பகுதியில் ஏற்கனவே இருந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இதனிடையே இங்கு தார்ச்சாலைக்காக ஜல்லிகளை கொட்டிவிட்டு பணிகளை ஆரம்பித்தனர். அப்போது அருகில் குடியிருக்கும் விவசாயிகள் பட்டா நிலத்திற்குள் வருவதால் முறையாக அளவை செய்து, பின்னர் சாலை அமைக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலைப்பணி பாதியில் கிடப்பில் போடப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்த முடியாமல் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. மேலும் அவசர தேவைக்காக இப்பகுதியில் வாகனங்களில் சென்றால் ஜல்லி கற்கள் டயர்களை பதம் பார்க்கின்றன.

மேலும் தூசிகள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து வருகிறது. எனவே வருவாய்த்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் கிடப்பில் போடப்பட்ட இச்சாலையை மீண்டும் தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘சின்னக்குளம்-நாகணம்பட்டி சாலைக்காக ஜல்லிக்கற்கள் வந்து கொட்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் சாலையில் நடந்துகூட செல்ல முடியவில்லை. வாகனங்களில் சென்றால் டயர் பஞ்சராகிவிடுகிறது. இதனால் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகிறோம். எனவே சாலையை மீண்டும் தொடங்கி முடிக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Chinnakulam-Naganampatti ,
× RELATED சேதமடைந்து காணப்படும் மின் கம்பத்தை மாற்ற வேண்டும்: மக்கள் கோரிக்கை