×

மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டும் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

தூத்துக்குடி, மார்ச் 12: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் ரத்தானது. இருப்பினும் குவிந்த பொதுமக்கள் மனுக்களை அங்குள்ள பெட்டியில் போட்டு சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் அரசின் நலத்திட்டங்கள் அறிவிப்பு மற்றும் குறை தீர்க்கும் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை இந்த நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். இந்நிலையில் வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட விவரம் தெரியாமல் ஏராளமான பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

வீட்டுமனை பட்டா, உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல பெண்கள் மனுக்களோடு கலெக்டர் அலுவலக வாசலில் வழக்கம்போல் திரண்டு வந்து நின்றனர்.  கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தேர்தல் நடத்தை விதிகள் இருப்பது குறித்து அவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து தாங்கள் கொண்டுவந்த மனுக்களை  அங்குள்ள பெட்டியில் போட்டுவிட்டு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்க முடியாமல் பொதுமக்கள்ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : collector ,crowd meeting ,office ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...