×

மாதவரம், மஞ்சம்பாக்கத்தில் அதிகாரிகள் துணையுடன் நிலத்தடி நீர் திருட்டு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: மாதவரம், மஞ்சம்பாக்கத்தில் அதிகாரிகளின் உதவியுடன் நிலத்தடி நீர் திருடப்படுவதால் குடியிருப்புகளில் நிலத்தடி நீர் வற்றி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாதவரம், மஞ்சம்பாக்கம், ஏ.வி.எம்.நகர், மாத்தூர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகள் அருகே உள்ள மாந்தோப்பு மற்றும் காலி நிலங்களில் தனியார் சிலர் முறையான அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகளை அமைத்து, ராட்சத  மோட்டார் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகளில் நிரப்பி  சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு, நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால், சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த குடிநீர்  திருட்டை தடுக்க வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  நிலத்தடி நீர் திருட்டுக்கு உச்ச நீதிமன்றமும் தடை விதித்துள்ளது. ஆனாலும், அந்த தடையை மீறி நிலத்தடி நீர் திருடப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாதவரம் வருவாய்துறை மற்றும் மாதவரம் குடிநீர்  வழங்கல் அதிகாரிகள் இதுபோல் நிலத்தடி நீர் திருடிய இடங்களில் சோதனையிட்டு, அங்கிருந்த மின் மோட்டார்களை பறிமுதல் செய்து மின் இணைப்பை துண்டித்து, சட்ட விரோதமாக செயல்பட்ட தனியார் குடிநீர்  நிறுவனங்களை இழுத்து பூட்டி சீல் வைத்தனர்.

ஆனால், தற்போது சீல் வைக்கப்பட்ட பல நிறுவனங்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி வெளியிலிருந்து தண்ணீரை கொண்டு பயன்படுத்துகிறோம் என்ற பெயரில் மீண்டும் திருட்டுத் தனமாக நிலத்தடி நீரை திருடி  விற்று வருகின்றனர்.   
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சிலர் இப்பகுதியில் நிலத்தடி நீரை  சட்ட விரோதமாக உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இதுபற்றி வருவாய் துறை, குடிநீர் வழங்கல் வாரிய  அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த தண்ணீர் திருட்டு பற்றி கவர்னர், முதல்வர், மாவட்ட கலெக்டர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் என அனைவருக்கும் புகார்  தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரையிலும் நிலத்தடி நீர் திருட்டு ஓய்ந்தபாடில்லை.
திருட்டுத்தனமாக நிலத்தடி நீரை உறிஞ்சி கொண்டு செல்லும் லாரிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் இயக்கப்படுகிறது. அவ்வாறு வரும் லாரிகள் அதிவேகமாக  செல்வதால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும்  வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. வேகமாக வரும் குடிநீர் லாரிகளை போலீசாரும் கண்டுகொள்வதில்லை,’’ என்றனர்.

மண்டல அலுவலகம் முற்றுகை
மாதவரம் அருகே விலாங்காடுபாக்கம் ஊராட்சி பகுதியில்  உள்ள கன்னாம்பாளையம் கிராமத்தில் தனியார் சிலர் ராட்சத மோட்டார்களை  பயன்படுத்தி நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்  வெகுவாக  குறைந்து விட்டது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர்  நேற்று மதியம் மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே திரண்டு, நிலத்தடி நீர்  திருட்டை தடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி   ஆர்ப்பாட்டம் செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து  சென்றனர்.

Tags : Manapavaram ,Manapakkam ,
× RELATED கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி: குண்டர் சட்டத்தில் கைது