×

கரூர் மாவட்டத்தில் 125 விவசாய ஆர்வலர் குழுக்கள் அமைப்பு

கரூர், மார்ச் 8: கரூர் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் கூட்டுப்பண்ணைய திட்டத்தின்கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.கரூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது:மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க நிதியுதவி, விவசாய ஆர்வலர் குழுக்கள் அமைத்து தொகுப்பு நிதி வழங்குதல், குறைந்த வாடகைக்கு வேளாண் கருவிகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 20 சிறு, குறு விவசாயிகளை ஒருங்கினைத்து விவசாய ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு, பின்னர் ஆர்வலர்கள் குழுக்கள் அமைக்கப்படும். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 125 விவசாய ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 விவசாய ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து தலா 100 விவசாயிகளை கொண்ட 25 உற்பத்தியாளர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டில் இந்த குழுக்களுக்கு கூட்டுப் பண்ணைய தொகுப்பு நிதியின்கீழ் தலா ரூ. 5 லட்சம் மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் ரூ.1.20கோடி மதிப்பிலான வேளாண் கருவிகள் 2,400 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் இந்தாண்டும் 2500 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.1.25 கோடி மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்படவுள்ளன. இதுபோன்ற திட்டங்களை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து 180 விவசாயிகளுக்கு ரூ.1.50கோடி மதிப்பிலான 32 வேளாண் கருவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெயந்தி, நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகானந்தம், உதவி இயக்குநர் கந்தசாமி உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags : activist groups ,district ,Karur ,
× RELATED கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி