×

மாவட்டத்தில் உள்ள 700 நீர்நிலைகளில் மழை நீரை சேகரிக்க ஏற்பாடு

காரைக்குடி, மார்ச் 8: மாவட்டத்தில் உள்ள 700 ஊரணிகளில் மழைநீரை சேகரிக்கும் வகையில் 24 மண் அள்ளும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை சார்பில் தூய்மையான பாரதம், புதுமையான பாரதம் 2019 என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பல்கலைக்கழக மகளிரியல் துறை தலைவர் மணிமேகலை பேசுகையில், கழிப்பறை இல்லையெனில் பெண்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக கிராமத்து பெண்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகள் மனநிலையும் பாதிக்கப்படுகின்றன. இதனை போக்கவே மத்திய அரசும், மாநில அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு சுகாதார சேவைகளை செய்து வருகின்றனர்.துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ஆரோக்கிய வாழ்க்கைக்கு தூய்மையே அடித்தளம். மக்கும் பொருட்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும். பண்டைய காலங்களில் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அது நாளடைவில் வெகுவாகக் குறைந்துவிட்டது. பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததால் பெண் குழந்தைகளின் வருகை குறைந்துள்ளது என்றார்.
மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் துவக்கிவைத்து பேசுகையில், மாவட்டத்தில் ஒரு லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. கழிப்பறைகள் பராமரிப்பதற்கான வழிவகைகள் சமூகம் சார்ந்த வரைபடம் மூலம் கண்காணிப்பட்டு வருகிறது. திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், கழிப்பறைகளை சரியாக பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் குறிந்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம். தூய்மையாக இருந்தால் உழைப்பின் திறன் அதிகரிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் உள்ள 700 ஊரணிகளில் மழைநீரை சேகரிக்க 24 மண் அள்ளும் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றுப்படுகையில் 42 கி.மீக்கு நிலத்தடிநீரை சேகரிக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்றார். உதவி பேராசிரியர் வீரமணி நன்றி கூறினார்.

Tags : watersheds ,district ,
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...