×

காலிப்பணியிடத்தை நிரப்ப கோரி அங்கன்வாடி மைய ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மதுரை, மார்ச் 8: காலிப்பணியிடத்தை நிரப்ப கோரி அங்கன்வாடி மைய ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாவி ஒப்படைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டத்தில் அங்கான்வாடி மையத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடம் உள்ளது. அதற்கு ஊழியர்களை அரசு நியமிக்கவில்லை. இதனால், பணிச்சுமை அதிகரிப்பதாகவும், ஊழியர்களை நியமிக்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மாலை அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில், 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனே காலிப்பணியிடத்திற்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால், காலிப்பணியிடம் உள்ள அங்கன்வாடி மைய சாவியை ஒப்படைப்போம் எனக் கோரி கோஷம் போட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பேச்சுவார்த்தை நடத்த கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags : Anganwadi Center ,staffers ,Collector ,Galleon ,
× RELATED அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது