×

கலெக்டர் ரோகிணி பேட்டி மாவட்டத்தில் தேர்தல் பணியில் 25,835 அலுவலர்கள்

சேலம், மார்ச் 8: சேலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகியுள்ளநிலையில், பறக்கும் படை உள்பட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 25,835 அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என கலெக்டர் ரோகிணி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, சேலம் கலெக்டர் ரோகிணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு, இடைப்பாடி, ஓமலூர், வீரபாண்டி ஆகிய 6 தொகுதிகள் சேலம் நாடாளுமன்ற தொகுதியிலும், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகியவை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியிலும், மேட்டூர் சட்டமன்ற தொகுதி தர்மபுரி தொகுதியிலும், சங்ககிரி தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியிலும் வருகிறது. கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் படி, மாவட்டம் முழுவதும் 28,61,881 வாக்காளர்கள் உள்ளனர். இதில், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 15,92,487 வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆண் வாக்காளர்கள் 8,00,320 பேரும், பெண் வாக்காளர்கள் 7,92,090 பேரும், திருநங்கைகள் 77 பேரும் உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் தற்போதும், தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். மாவட்டம் முழுவதும் 1,152 இடங்களில் இந்த பணிகள் தற்போதும் நடந்து வருகிறது. எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதற்காக தொடர் திருத்தப்பணி நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அறிய 1950 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  அதேபோல், வாக்குபதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்தும், எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதை வெளிக்காட்டும் விவி பேட் இயந்திரம் தொடர்பாகவும் மாவட்டம் முழுவதும் மக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து வருகிறோம். சேலம் மாவட்டம் முழுவதும் 3,288 வாக்குச்சாவடிகளும், 11 துணை வாக்குச்சாவடிகளும் என 3,299 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், தற்போது வரையில் பதட்டமான வாக்குச்சாவடிகளாக 212 கணக்கிடப்பட்டுள்ளது. இது தேர்தல் நேரத்தில் மாறிட வாய்ப்புள்ளது. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்.  

தேர்தலுக்காக சட்டமன்ற தொகுதிக்கு 3 வீதம் 33 பறக்கும்படை, 33 நிலை கண்காணிப்பு குழு, 33 வீடியோ கண்காணிப்பு குழுவும், தொகுதிக்கு ஒன்று வீதம் 11 வீடியோ பார்வையிடும் குழு, 11 கணக்கெடுக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 11 உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி பணியில் 15,835 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதுதவிர தேர்தல் பணியில் 10,000 அரசு அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். அதில், கூட்டுறவுத்துறையை சேர்ந்த ஊழியர்களும் இருக்கிறார்கள். வாக்குப்பதிவுக்காக 7,824 வாக்குப்பதிவு இயந்திரமும், 4,533 கட்டுப்பாட்டு இயந்திரமும், 4,251 விவி பேட் இயந்திரமும் தயார் நிலையில் இருக்கிறது. மேலும், 500 விவி பேட் இயந்திரங்கள் வர இருக்கிறது.  புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை மட்டுமே கொண்டு வாக்களிக்க அனுமதிக்க முடியாது. அதனுடன் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் உள்பட 11 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று இருந்தால் தான் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். தேர்தலை நடத்துவதற்கு முழுவீச்சில் தயாராக இருக்கிறோம். இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார். அப்போது டிஆர்ஓ திவாகரன் உடன் இருந்தார்.

Tags : Rokini ,polling district ,
× RELATED வரலாறு படைத்தது குலசை.. காற்றை...