×

ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

ஆத்தூர், மார்ச் 8: ஆத்தூர் அடுத்த தாண்டவராயபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து,  காலி குடங்களுடன் பெண்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம்  மாவட்டம் ஆத்தூர் அடுத்த தாண்டவராயபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக இப்பகுதி மக்களுக்கு  குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து பல முறை ஊராட்சி  நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இதனால் குடிநீர் தேடி விவசாய கிணறுகளுக்கு செல்லும் நிலை  ஏற்பட்டது. தவிர, காசு கொடுத்து கேன் குடிநீர் வாங்கும் அவலம் ஏற்பட்டது.  காலை  நேரத்தில் குடிநீர் தேடி செல்வதால், மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள்  பெரிதும் சிரமப்படுகின்றனர். கோடை தொடக்கத்திலேயே ஒரு மாதத்துக்கு ஒருமுறை  குடிநீர் விநியோகிக்கும் ஊராட்சி நிர்வாகம், அடுத்து வரும்  இரண்டு  மாதங்கள் எவ்வாறு குடிநீர் விநியோகம் என பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து  நேற்று காலை தாண்டவராயபுரத்தில் உள்ள  ராசிபுரம் சாலையில் காலி  குடங்களுடன் திரண்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து ஆத்தூர்  போலீசார், ஊராட்சி செயலாளர்  ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து  பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராமத்தில் உடனடியாக ஆழ்துளை கிணறு  அமைத்து குடிநீர் விநியோகம் செய்யவதாக உறுதியளித்தனர். ஆனால் அதை  மறியலில் ஈடுபட்ட பெண்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து கிராமத்தில்  ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர்.  இதையடுத்து சமாதானமடைந்த பெண்கள், மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து  சென்றனர். இதனால்  ராசிபுரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

Tags : girls ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்