×

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் முக்கிய பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகள் பாதிப்பு

நாமக்கல், மார்ச் 8: நாமக்கல் நகராட்சியில் மேலாளர், பொறியாளர், அக்கவுண்டன்ட்  உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் காலியாக இருப்பதால் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். நாமக்கல் நகராட்சியில், கடந்த 10 மாதமாக ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்தது. பொறியாளர் கமலநாதன், ஆணையாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த இருவாரங்களுக்கு முன் நகராட்சி ஆணையாளராக சுதா நியமிக்கப்பட்டார். நகராட்சி பொறியாளர் கமலநாதன் பதவி உயர்வு பெற்று, சேலம் மண்டல நகராட்சி நிர்வாக பொறியாளராக கடந்த இரு நாட்களுக்கு முன் மாற்றப்பட்டார். இதனால், தற்போது பொறியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இதைத்தவிர, நகரமைப்பு அலுவலர் பணியிடம் கடந்த 7 மாதமாகவும், அக்கவுண்டன்ட் பணியிடம் ஓராண்டாகவும், சுகாதார ஆய்வாளர் பணியிடம் 2 ஆண்டுகளாகவும் காலியாக உள்ளது.

நகராட்சி மேலாளராக பணியாற்றி வந்த ஆறுமுகம், கடந்த ஒரு மாதத்திற்கு முன், கரூர் நகராட்சிக்கு பதவி உயர்வு மூலம் மாறுதலில் சென்றுவிட்டார். இப்படி முக்கிய பணியிடங்கள் காலியாக இருப்பதால், நகராட்சியில் குடிநீர் விநியோகம், ரோடு போடுவது, கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொறியாளர் பணியிடம் காலியாக இருப்பதால், கோடைக்காலம் நெருங்கும் நிலையில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. முக்கிய பணியிடங்கள் காலியாக இருப்பதால், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.

Tags : workplaces ,Namakkal ,
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம்