×

காரிமங்கலத்தில் கடும் வறட்சி தண்ணீரை விலைக்கு வாங்கி மாமரங்களுக்கு ஊற்றும் அவலம்

காரிமங்கலம், மார்ச் 8: காரிமங்கலம் பகுதியில் நிலவும் கடும் வறட்சியால், தண்ணீரின்றி காய்ந்து வரும் மாமரங்களுக்கு விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியான எலுமிச்சனஅள்ளி, பொம்மஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், கெண்டிகானஅள்ளி, பேகாரஅள்ளி உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் மா சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. இதில், பெங்களூரா, மல்கோவா, செந்தூரம், நீலம், பங்கனப்பள்ளி, அல்போன்சா உள்ளிட்ட  பல்வேறு வகை மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு விளைவிக்கப்படும் மா வகைகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வறட்சி காரணமாக மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், கடந்த சில வாரங்களாக மாம்பூக்கள் உதிர்ந்து, மா சாகுபடி கடுமையாக குறைந்துள்ளது. மேலும், மா பிஞ்சுகள் வெம்பிய நிலையில் உள்ளது. எனவே மா மரங்களை காப்பாற்ற விவசாயிகள், டிராக்டரில் தண்ணீர் வாங்கி மா மரங்களுக்கு ஊற்றி காப்பாற்றி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் காய்ந்து வரும் மா மரங்களை காப்பாற்ற, ஒரு டிராக்டர் தண்ணீர் ₹600 முதல் ₹900 வரை விலைக்கு வாங்கி, மரங்களுக்கு ஊற்றி வருகிறோம். இதே நிலை நீடித்தால், நடப்பாண்டில் மா சாகுபடி பெருமளவில் குறைந்து விடும்,’ என்றனர்.

Tags : drought ,Gulf ,
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு