×

ஆம்புலன்ஸ்க்கு பெரும் இடையூறு திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு வழிப்பாதை கட்டாயமாக்கப்படுமா?

திருச்சி, மார்ச் 8: திருச்சி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சுகள் சென்று வருவதில் இடையூறு ஏற்படுவதால் ஒரு வழிப்பாதையை கட்டாயமாக்க வேண்டும் என்று  பொதுமக்ககள் எதிர்பார்க்கின்றனர். திருச்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து தினமும் நூற்றுக்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, விபத்து அவசர சிகிச்சை பிரிவு, தீப்புண் வார்டு உள்பட பல்வேறு வார்டுகள் உள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி டாக்டர்கள், ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைக்கு 2 நுழைவு வாயில்கள் உள்ளது. ஏற்கனவே பழைய மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள முகப்பு வழி மற்றும் 2வதாக தீவிர சிசு மற்றும் பிரசவ மருத்துவமனை அருகே புதிதாக கட்டப்பட்ட நுழைவு வாயில் உள்ளது.

இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிகளவில் 2வது நுழைவு வாயில் பகுதி வழியாக சென்று வருகிறது. இதில் அதே வழியாக பைக், கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வந்து செல்வதால் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. இதையடுத்து 2வது நுழைவு வாயில் பகுதியை மருத்துவமனைக்குள் செல்வதற்கு மட்டும் பயன்படுத்துவதற்கான ஒரு வழி பாதையாக மாற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, பிரசவ வார்டு பகுதியில் உள்ள கேன்டீன் அருகே சாலையின் நடுவில் கயிறு மூலம் தடுப்பு ஏற்படுத்தி அங்கு காவலாளி நிறுத்தப்பட்டுள்ளார். அவ்வழியே வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி அருகில் உள்ள மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் ஒருவழிப்பாதையாக மாற்றினாலும் டாக்டர்கள் மற்றும் அரசு மருத்துவமனை வாகனங்கள் மீண்டும் அதே வழியாக வெளியே செல்ல முயற்சித்து வருகின்றனர். இதனால் காவலாளிக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றும் முயற்சிக்கு ஏற்ப அப்பகுதியில் பேரிகாட் வைத்து எதிரே வரும் வாகனங்களை தடுத்து மாற்று வழியில் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வாகன நிறுத்தும் இடம்
அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களின் வாகனங்கள் மற்றும் டாக்டர்கள் உள்ளிட்டோரின் கார்கள் வாகனங்கள் வெட்ட வெளியிலும், மரத்தடியிலும் நிறுத்தப்பட்டு வருகிறது. எனவே வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ஏற்ப வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தரமற்ற உணவு விற்பனையை தடுக்க வேண்டும்
தீவிர சிசு மற்றும் பிரசவ மருத்துவமனையின் 2வது மெயின் கேட் அருகே மதியம் நேரங்களில் சாப்பாடு விற்பனை ஜோராக நடந்து வருகிறது. அவ்வாறு விற்கப்படும் சாப்பாடு தரமானதாக உள்ளதா என தெரியாமல் அதனை வாங்கி நோயாளிகளுக்கும் கொடுத்து உறவினர்களும் சாப்பிட்டு வருகின்றனர். எனவே இதற்கும் முற்றுப்புள்ளி வைத்து தரமான உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags : Trichy Government Hospital ,
× RELATED வயலூர் சாலையில் நவீன போலீஸ் சோதனை சாவடி