×

காங்கயம் அருகே வீட்டில் கொள்ளை போன வழக்கில் ஒருவர் கைது

காங்கயம், மார்ச் 8: காங்கயம் அருகே வீட்டின்  பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 9.5 பவுன் நகையை மீட்டனர்.
காங்கயம் திருப்பூர் ரோட்டில் உள்ள ஜெ.ஜெ., நகரில் ரமேஷ்(40) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் குண்டடம் நால்ரோட்டில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 11.10.2018 அன்று வேலைக்கு சென்று விட்டார். ரமேஷின் மனைவி அன்புக்கரசி இரு மகள்களையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருந்துள்ளார். பகல் 11 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, காய்கறி வாங்குவதற்கு கடைக்கு காங்கயம் சென்று விட்டு, பின்னர் மாலை 4.30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள் அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பூரோவில் இருந்த 9.5 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி பதிவு மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நாளில் அங்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் குறித்து தகவல் சேகரித்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.  இதில் சந்தேகத்திற்குரிய செல்போன் எண்ணை காங்கயம் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் திருப்பூர், முதலிபாளையம், சிட்கோ பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(28) நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் காங்கயம் அடுத்த படியூர் செக்போஸ்ட்டில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, ஸ்கூட்டி வாகனத்தில் வந்த ஆறுமுகத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து 9.5 பவுன் நகை மீட்கப்பட்டது. ஆறுமுகத்தை காங்கயம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : robbery ,house ,kerala ,
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...