×

குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

திருப்பூர், மார்ச் 8: குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திருப்பூர் 1வது மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். திருப்பூர் மாநகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் கவுன்சிலர் மாரப்பன் தலைமையில், அப்பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் 1-வது மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். கண்காணிப்பாளர் ராஜசேகரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு இந்திரா நகரில் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். இந்த பகுதியில் 1500 குடும்பங்கள் வசிக்கின்றன.  இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமையும் பட்சத்தில், அப்பகுதியில் சுகாதார பாதிப்பு ஏற்படும் என அச்சப்படுகிறோம். எனவே, இந்திரா நகரில் குப்பை கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட
வேண்டும்.


மேலும், இந்திரா நகரின் வடக்கு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், வடிகால் வசதி செய்து தரப்படாமல் உள்ளது. இதன் காரணமாக கழிவு நீர் ரோடுகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. எனவே, நில உரிமையாளர்களை அழைத்து பேசி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இதே பகுதியில் தார்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, தார் சாலைகளையும் புதுப்பித்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  குடியிருப்பு  பகுதியில் குப்பை கிடங்கு அமையும் பட்சத்தில், சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு, மக்களுக்கு நோய்  பாதிப்பு ஏற்படும்.  ஆகவே, குப்பை கிடங்கு அமைக்கும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். இதேபோல், ரோடு வசதி, வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தவறும் பட்சத்தில், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம், என்றனர்.

Tags : Siege ,area ,garbage warehouse ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...