×

கனிராவுத்தர்குளத்தில் ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றம்

ஈரோடு, மார்ச் 8: ஈரோடு கனிராவுத்தர்குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர். இதை பார்த்த பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஈரோடு மாநகராட்சி கனிராவுத்தர்குளம் பகுதியில் 14 ஏக்கர் பரப்பளவில் கனிராவுத்தர்குளம் அமைந்துள்ளது. பெரியசேமூர், சின்னசேமூர், எல்லப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் சாக்கடைநீர் கனிராவுத்தர்குளத்தில் கலப்பதால் குளம் பாழடைந்து வருகிறது. இதனால், குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, குளத்தின் கரையில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தும் இடித்து அகற்றப்பட்டது. குளத்தை சுற்றிலும் சாக்கடை கால்வாய்களும் கட்டப்பட்டு, குளக்கரையை ஒட்டியவாறு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்கான குழாய்களும் பதிக்கப்பட உள்ளது.வீடுகள் அகற்றப்பட்டாலும், குளத்தின் கரையோர பகுதிகளில் இருந்த கோயில்கள் அகற்றப்படாமல் இருந்தது.

இந்த குளத்தின் கரையில் பெரியாண்டிச்சியம்மன் கோயில், முனியப்பன் கோயில், கருப்பண்ணசாமி, பொன்னர் சங்கர் ஆகிய 4 கோயில் உள்ளது. இக்கோயில்களை அகற்ற பொதுமக்களும் பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், குளத்தை தூர்வாரவும், சாக்கடை கால்வாய் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால், பணிகளை தொடங்க வேண்டியது உள்ளதால் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.  அதன்படி, நேற்று காலை கனிராவுத்தர்குளத்தின் கரையோரத்தில் இருந்த கோயில்கள் இடித்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. 3 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு கோயில்களை இடித்தனர். இதை பார்த்த பக்தர்கள் கோயில்களை இடிக்க வேண்டாம் என கண்ணீர் விட்டு  அதிகாரிகளிடம் மன்றாடினர். ஆனால், அதிகாரிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் கோயில்களை இடித்து தள்ளினர்.

அப்போது பாரதிநகரைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் சாமியாடினார். நீண்ட நேரமாக சாமியாடிய அவர், போலீசாரையும் அதிகாரிகளையும் பார்த்து கோயிலை இடித்து விட்டீர்கள். இதற்கான தண்டனையை சாமி உங்களுக்கு கொடுக்கும் என்று ஆக்ரோஷத்துடன் கூறினார். இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகவடிவு, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாதவாறு ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முருகையன், சரவணன், பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் இந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

Tags : Removal ,temples ,Kannur ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு