தமிழகம் முழுவதும் மூன்று கட்ட நிதி ஒதுக்கீட்டால் கோயில் திருப்பணிகள் தாமதம் கோயில் செயல் அலுவலர்கள் வேதனை

வேலூர், மார்ச் 8: மூன்று கட்டங்களாக நிதியை பிரித்து ஒதுக்குவதால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களால் கோயில் திருப்பணிகளில் தாமதம் ஏற்படுவதுடன், பணியின் தரத்திலும் குறை ஏற்படுவதாக கோயில் செயல் அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 40,190 திருக்கோயில்கள், மடங்கள் உள்ளன. இக்கோயில்கள் வருவாய் அடிப்படையில் பட்டியல் சாராத கோயில், பட்டியலிடப்பட்ட கோயில்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ₹10 ஆயிரத்துக்கு கீழ் 34,082 கோயில்கள் இருக்கின்றன. ₹10 ஆயிரத்துக்கு மேலே உள்ள கோயில்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் 3,550 கோயில்கள் ஆண்டுக்கு ₹10 ஆயிரம் முதல் ₹2 லட்சம் வரை வருவாய் உள்ளவை. 2வது பிரிவில் 672 கோயில்கள் ஆண்டுக்கு ₹2 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை வருவாய் உள்ளவை. 3வது பிரிவில் 331 கோயில்கள் ₹10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் கொண்டவை.

இக்கோயில்களில் திருப்பணிகள் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பொதுநிதி திட்டத்தின் கீழ் ₹5 லட்சம் முதல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் இந்து சமய அறநிலையத்துறை பொறியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகே பணியை மேற்கொள்பவர்களுக்கு பில் செட்டில் செய்யப்படுகிறது. இவ்வாறு திருப்பணி மேற்கொள்ளப்படும் திருக்கோயில்கள் அடையாளம் காணப்பட்ட உடன் மண்டல பொறியாளர் தலைமையிலான குழு கோயில் திருப்பணிக்கான மதிப்பீட்டை தயார் செய்து இணை ஆணையரின் வழியாக ஆணையரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு பட்டியலிடப்படும் கோயில்களுக்கு மதிப்பீட்டின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த நடைமுறை மாற்றப்பட்டது. திருப்பணியின் மதிப்பீட்டு தொகையில் முதல்கட்டமாக 30 சதவீதமும், 2ம் கட்டமாக 40 சதவீதம், 3ம் கட்டமாக 30 சதவீதம் என்று பிரித்து மூன்று கட்டங்களாக ஒதுக்கப்படுவதாகவும், ஒவ்வொரு தவணைக்கும் முடிக்கப்பட்ட பணிகளின் ‘எம் புக்’ தயார் செய்து அதன் அடிப்படையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மண்டல பொறியாளர்கள் ஒப்புதல் அளித்து அதன் பிறகே இணை ஆணையர் மூலம் பொறியாளர் சான்றிதழ் வழங்கப்பட்டு ஆணையர் ஒப்புக் கொண்ட பிறகு 2ம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்படும். இந்நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் முடிவடைந்ததும் மேற்கண்ட நடைமுறைகள் முடிந்து 3ம் கட்டமாக நிதி ஒதுக்கப்படும்.

இந்த நடைமுறை சிக்கல்களால் 3 மாதத்தில் முடிய வேண்டிய பணி ஓராண்டை கடந்தும் முடிவடையாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் பணியின் தரம் தாமதம் காரணமாக குறையும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதோடு பல மண்டலங்களில் பொறியாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளது. இது தற்போது மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து மாநிலம் முழுவதும் திருக்கோயில்களில் நடந்து வரும் பணிகள் முடிவடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று செயல் அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>