×

வேலூர் நன்னடத்தை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கில் ஆவின் பாலகம், அங்காடி திறப்பு டிஐஜி பங்கேற்பு

வேலூர், மார்ச் 8: வேலூர் நன்னடத்தை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஆவின் பாலகம், கைதிகளின் தயாரிப்பு பொருட்கள் விற்பனை அங்காடியை சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி திறந்து வைத்தார்.

வேலூர் மத்திய சிறை அருகே நன்னடத்தை கைதிகளுக்கான பெட்ரோல் பங்க் கடந்த மாதம் 22ம் தேதி திறக்கப்பட்டது. இந்த பங்க்கில் சுழற்சி முறையில் 22 கைதிகள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு ஏடிஎம் வசதி, ஆவின் பாலகம், சிறைக்கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை அங்காடி ஆகியவை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆவின் பாலகம் மற்றும் விற்பனை அங்காடி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி அங்காடியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கண்காணிப்பாளர்கள் ஆண்டாள், நிகிலா நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் விற்பனையை இந்தியன் ஆயில் நிறுவன வேலூர் மாவட்ட மேலாளர் சரவ் ஆனந்த் பெற்றுக்கொண்டார்.

இங்கு கைதிகள் தயாரிக்கும் ஷூக்கள், பெல்ட், ரெடிமேட் சர்ட், காய்கறிகள், கரும்பு உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஷூக்கள் ₹550 முதல் ₹1,000 வரையும், பெல்ட் ₹200 முதல் ₹350 வரையும் விற்கப்படுகிறது. மேலும் பெட்ரோல் பங்க்கில் கடந்த 14 நாட்களில் ₹30 லட்சம் வரை விற்பனையாகி உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : camp ,Aiyin ,conductors ,store ,Vellore ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு