×

நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடக்கம்

திருவள்ளூர், மார்ச் 8: திருவள்ளூர் மாவட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் “திடக்கழிவு மேலாண்மை” திட்டம் செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. பல கிராமங்களில் மது அருந்தும் இடமாக பயன்பாட்டில் உள்ளது. இதனால், அரசு நிதி 2 கோடி வீணாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி ஆகிய நகராட்சிகளும், 10 பேரூராட்சிகளும், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, பூண்டி, எல்லாபுரம், திருத்தணி, பூந்தமல்லி உட்பட 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளும் உள்ளன.இதில் கடந்த 2016-17ம் ஆண்டில் 130 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் தலா 1.50 லட்சம் மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதேபோல், நகராட்சிகளில் வார்டுகள் தோறும் உள்ள பூங்காக்களில் உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டது. திட்டத்தின்படி, கிராமங்களில் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களை கொண்டு குப்பைகளை சேகரித்து அதை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்தெடுத்து, மக்கும் குப்பைக்கு தனிக்குழி, மக்காத குப்பைக்கு தனிக்குழி என வெட்டி குப்பைகளை கொட்டவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த பணியை செய்ய, 150 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்தெடுத்து குழிகளில் கொட்ட வேண்டும். இவர்களுக்கு தூய்மை காவலர்கள் என பெயர்.

தூய்மைக் காவலர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு மேல் சட்டை, ஒரு தொப்பி, ஒரு ஜோடி கையுறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்பட்டது. குப்பைகளை சேகரிக்க ஒவ்வொரு 300 குடும்பங்களுக்கு ஒரு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது. மேலும் தூய்மை காவலர்களுக்கு முதல் 100 நாள் ஊதியம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்பட்டு வந்தது. அதோடு, மண்புழு உரம் தயாரிக்கவும் தனியாக ஓலை கூரையால் வேய்ந்த கட்டிடம் ஊராட்சிகளில் கட்டப்பட்டது. நகராட்சிகளில் ஷெட் அமைக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் முறையாக செயல்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அனைத்து நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படாமல் முற்றிலும் முடங்கி கிடப்பதால் நகரம், கிராமம் முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மண்புழு உரமும் தயாரிப்பு இல்லை. அனைத்தும் காட்சிப் பொருளாக உள்ளது. இதுகுறித்து மக்கள் கூறுகையில், ‘‘மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை தரம் பிரிக்க தோண்டப்பட்ட குழிகளில், இதுவரை குப்பைகளை கொண்டு சென்று தரம் பிரித்து கொட்டவில்லை. மண்புழு உரம் தயாரிப்புக்கென கட்டப்பட்ட ஓலையால் வேய்ந்த கட்டிடம், இப்பகுதி குடிமகன்களின் கூடாரமாக உள்ளதோடு, சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது. இதனால் அரசு பணம் வீணாகி உள்ளது. எனவே, இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்’’ என்றனர்.

Tags : areas ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை