திருப்பூர், மார்ச் 7: திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 548 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 28வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ராமையா தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்: சமுதாயத்தில் நீங்கள் உங்கள் துறையில் எட்டாக்கனியாக உயர்ந்து பல சேவைகளை அவரவர் துறையில் மேலோங்க செய்து அடையாளத்தை விதைக்க வேண்டும். மாணவர்கள் சிறந்த மனப்பான்மையோடு மன உறுதி கொண்டு தனக்கென்ற ஒரு தனி இடத்தை தக்கவைத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். படிப்பு என்பது சமுதாயத்தில் உங்களுக்கு அடையாளம் ஆகும் என்றார்.
விழாவில், இளங்கலை பிரிவில் 411 மாணவ, மாணவிகளுக்கும், முதுகலை பிரிவில் 133 மாணவ, மாணவிகளுக்கும், ஆராய்ச்சி பிரிவில் 4 பேருக்கும் என மொத்தம் 548 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும், இளங்கலை பிரிவில் மாணவர் தனபால் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். இதுதவிர பல்கலைக்கழக அளவில் தேர்ச்சிப் பெற்ற 7 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.