×

நெல்லியாளம் நகராட்சியில் தார்சாலை பணியில் முறைகேடு

பந்தலூர், மார்ச் 7:நெல்லியாளம் நகராட்சியில் தார்சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நெல்லியாளம் நகராட்சி 19வது வார்டு தொண்டியாளம் அருகே கல்கடவு பகுதியில் இருந்து கொளப்பள்ளி ஜங்சன் ஏலமன்னா வரை சுமார் இரண்டு கி.மீ., தூரத்திற்கு சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் அவசர தேவைக்குகூட ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியா நிலை நீடித்தது. இதைத்தொடர்ந்து இப்பகுதி மக்கள் பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க தர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

இதன்பேரில், நெல்லியாளம் நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நேற்று முன்தினம் துவக்கியது. கல்கடவு பகுதியில் இருந்து 200 மீ., தூரம் வரை சாலைப்பணிகள் செய்யப்பட்டு மீதமுள்ள பழுதடைந்த சாலையை அப்படியே விட்டுவிட்டனர்.
பின், அம்புரூஸ் வலைவிலிருந்து  மேங்கொரேஞ் எலியாஸ் கடை பகுதிக்கு செல்லும் ஏற்கனவே போடப்பட்ட பழுது இல்லாத சாலையை ஒப்பந்ததாரர் பணி மேற்கொண்டதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், ‘‘பொதுமக்கள் பயன்படுத்தும் பழுதடைந்த தார்சாலைப்பணியை செய்யாமல் யானைகள் செல்லக்கூடிய தரமான சாலையில் பணி மேற்கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. பல்வேறு இடங்களில் ஒப்பந்ததாரர் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்’’ என்றனர்.
இது குறித்து நெல்லியாளம் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலத்திடம் கேட்டப்போது, ‘‘ பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Dorale ,municipality ,Nelliyalam ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...