×

முதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர் நியமிக்க நடவடிக்கை

ஊட்டி, மார்ச் 7: முதுமலை புலிகள் காப்பகத்தில் விரைவில் வன கால்நடை மருத்துவர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என புதிய கள இயக்குநர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த புலிகள் காப்பகத்தின் கள இயக்குநராக உலகநாதன் இருந்தார். அவர் பதவி உயர்வு பெற்று கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் முதுமலைக்கு புதிதாக கள இயக்குநர் நியமிக்கப்படாமல் இருந்தது. மேலும், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கோவை மண்டல வன பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சவா கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். முதுமலை புலிகள் காப்பக எல்லை கடந்த ஆண்டில் இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட நிலையில், கள இயக்குநரை நியமிக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ேவலூரில் கூடுதல் தலைமை வன பாதுகாவலராக இருந்த  கிருஷ்ணகுமார் கவுசல், முதுமலை புலிகள் காப்பகத்தின் புதிய கள இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘முதுமலையில் வனம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பந்திப்பூரில் இருந்து வந்த காட்டு தீ காரணமாக தான் முதுமலையிலும் தீ ஏற்பட்டது. இதில் பெரிய அளவில் வனங்களுக்கோ, வன விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை. லேண்டனா, பார்த்தீனியம் போன்ற அந்நிய களை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். முதுமலையை பொறுத்த வரை வன கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. கூடலூர் மற்றும் ஊட்டியில் இருந்து கால்நடைத்துறை மருத்துவர்கள் வாரம் ஒருவர் என ஷிப்ட் முறையில் வந்து செல்கின்றனர். நிரந்தரமாக வன கால்நடை மருத்துவர் நியமிக்க வேண்டும் என வனத்துறையில் இருந்து கால்நடைத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் முதுமலை புலிகள் காப்பகத்தில் வன கால்நடை மருத்துவர் நியமிக்கப்படுவார்’’, இவ்வாறு கிருஷ்ணகுமார் கூறினார்.

Tags : Mudumalai Tiger reserve ,veterinarian ,
× RELATED நீலகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலி