×

வாக்கு கேட்டு வரும் அரசியல் வாதிகளிடம் புதிய அணை கட்டித்தர கோரிக்கை புத்தேந்தல் கிராம மக்கள் முடிவு

ராமநாதபுரம், மார்ச் 7: தேர்தல் தொடங்க உள்ள நிலையில் வாக்குக் கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் புத்தேந்தல் கிராமத்திற்கு புதிய அணை கட்டித்தர விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 8 மடைகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 3 ஆயிரத்து 900 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடந்து வருகிறது. இதில் 8வது மடை பகுதியில் புத்தேந்தல் கிராமம் உள்ளது. கிராமத்திற்கு அருகில் உள்ள மரிச்சுக்கட்டி அணைக்கட்டு பகுதியிலிருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் சுமார் 660 ஏக்கர் நஞ்சை நிலத்தில் கிராம மக்கள் ஒருபோகம் நெல், மிளகாய், பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். மரிச்சுகட்டி அணைக்கட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதுமாக சேதமடைந்து விட்டது. இதனால் கிராம மக்களின் விவசாயம் கேள்விக்குறியதாக மாறிவிட்டது. அணையில் உள்ள 15 சட்டர்களும் பழுதடைந்துள்ளதால் மழை காலங்களில் மழைநீர் வரும்போது அணையில் தண்ணீர் நிற்காமல் சக்கரக்கோட்டை கண்மாய்க்கு சென்று விடுகிறது.

இதை தடுக்க கிராம மக்கள் ஆண்டுதோறும் மணல் மூடைகளை அடுக்கி சிறிதளவு நீரை தேக்கி விவசாயம் செய்து வருகின்றனர். மரிச்சுகட்டி பகுதியில் சேதமடைந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆண்டுதோறும் அணையை பார்வையிட்டு புதிய அணை விரைவில் கட்டுப்படும் என கூறி செல்கின்றனர். இருப்பினும் இதுநாள்வரை புதிய அணை கட்டவில்லை. இந்தாண்டு மழைகாலம் துவங்கும் முன் புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சாத்தையா கூறுகையில், ‘அணையில் உள்ள சட்டர்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டது. இதனால் மழை காலங்களில் மழைநீர் வரும்போது அணையில் தண்ணீர் நிற்பது கிடையாது. நேரடியாக சக்கரகோட்டை கண்மாய்க்கு செல்கிறது.

இதனால் நாங்கள் மணல் மூடைகளை அடுக்கி தடுத்து நீரை தேக்கி விவசாயம் செய்கிறோம். சேதமடைந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட பலமுறை கோரிக்கை விடுத்தோம். இருப்பினும் அதிகாரிகளும், அமைச்சர்களும் பார்வையிட்டு மட்டுமே சென்றுள்ளனர். இதுநாள்வரை அதற்கான பணிகளில் ஈடுபடவில்லை. தண்ணீர் இல்லாததால் இப்பகுதியில் விவசாயம் செய்வது கேள்விக்குறியாக மாறிவிட்டது.  தற்போது விரைவில் பாராளுமன்ற தேர்தல் தொடங்க உள்ளதால் வாக்குக் கேட்டு அரசியல்வாதிகள் வருவார்கள். அவர்களிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். இந்த முறை அணை கட்டித் தர வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே எங்கள் வாக்கு’ என்றார்.

Tags : dam ,politicians ,
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்