×

ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக்கு இணையாக சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் முசிறியில் நடந்த மாநாட்டில் கோரிக்கை

தா.பேட்டை, மார்ச் 7:  ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக்கு செலவிடப்படும் தொகைக்கு இணையாக சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென முசிறியில் நடந்த சித்த மருத்துவர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. முசிறியில் ஒருங்கிணைந்த மரபு வழி சித்த மருத்துவர்கள் நல சங்கத்தின் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டு தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். சித்த மருத்துவர்கள் கோசிபா, முகேஷ், முத்தரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக நன்மைக்காக சிறப்பு யாக வேள்வியும், சித்தர் வழிபாடும் நடைபெற்றது. சித்த மருத்துவர் பழனிசாமி கோரிக்கைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் சிவானந்த புலிப்பாணிபாத்திர சுவாமிகள், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறந்த பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார். அப்போது சித்த மருத்துவர்களை மாநில அளவில் கணக்கெடுத்து தேவையான பயிற்சிகளையும், அரசு அங்கீகார சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக்கு செலவிடப்படும் தொகைக்கு இணையாக அரசு சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக பள்ளிகளில் சித்த மருத்துவத்தை பாடமாக கொண்டு வர வேண்டும். ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத நோய்களுக்கு உலக சுகாதார நிறுவனம் பட்டியலுக்குள்ள 50க்கும் மேற்பட்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு சித்த மருத்துவர்கள் வலியுறுத்தினர். மருத்துவர் சந்திரசேகர் வரவேற்றார். மருத்துவர் குணபாலன் நன்றி கூறினார். விழா அரங்கில் இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சித்த மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags : fundraiser ,conference ,English ,Musiri ,
× RELATED வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம்...