×

ஆய்வாளரை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சி, மார்ச் 7: துப்புரவு ஆய்வாளரை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் ரங்கம் கோட்ட அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சி ரங்கம் கோட்டத்தில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிபவர் டேவிட். இவர் சத்திரம் பஸ் நிலையத்தில் ஷிப்ட் முறையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும், சாதி பெயரைச் சொல்லியும் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் மீது மாநகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்ததாக இரண்டு துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதைக் கண்டித்தும், துப்புரவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் சிஐடியூ சங்கத்தை சேர்ந்த சுமார் 30க்கு மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ரங்கம் கோட்ட அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரங்கம் கோட்ட உதவி ஆணையர் குணசேகர் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின், பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு துப்புரவு பணியாளர்களையும் மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், புகார் குறித்து விசாரணை நடத்தி 10 நாட்களுக்குள் துப்புரவு ஆய்வாளர் டேவிட் மீது நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : protesters ,inspector ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு