×

அரியமங்கலம் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் 6 மணிநேரம் போராடி அணைத்தனர்

திருச்சி, மார்ச் 7: அரியமங்கலம் குப்பை கிடங்கு நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.  தீயணைப்பு வீரர்கள் 6 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். திருச்சி அரியமங்கலத்தில் 54 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 400 டன் வரை மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இங்கு மக்கும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் அதிகரித்து விட்டதால், இயற்கை உரம் தயாரிக்கும் பணி நின்று விட்டது.
இதனால் தற்போது குப்பைகள் சேர்ந்து மலை போல் காட்சியளிக்கிறது. இந்த குப்பை குவியல்கள் சுமார் 30 அடி உயரம் வரை உள்ளது. இந்த குப்பைகிடங்கில், திடீர் நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் நேற்று பகல் 12 மணியளவில் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதுகுறித்து தகவலின்பேரில்  மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் 2 வண்டிகளில் வந்த 15 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தண்ணீர் உதவிக்காக மாநகராட்சி சார்பில் 3 தண்ணீர் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும் பொக்லைன் இயந்திர உதவியோடு சுமார் 6 மணிநேரம் போராடி மாலை 5 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. குப்பைக்கிடங்கு தீப்பற்றி எரிந்ததால் அரியமங்கலம் பகுதியே கருமேகங்கள் சூழ்ந்து இருட்டாக காணப்பட்டது. மேலும் வாகனங்களில் சென்றவர்கள் புகையால் பெரிதும் அவதியடைந்தனர். அம்பிகாபுரம், திடீர் நகர் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் புகையால் ஏற்பட்ட மூச்சு திணறலில் சிக்கி துவண்டனர். பொதுவாக அரியமங்கலம் குப்பை கிடங்கில் ஏப்ரல் இறுதி அல்லது மேமாதம் துவக்கத்தில் தீப்பிடித்து எரிந்து வருவது வாடிக்கையாக இருந்து வந்தது. தற்போது இந்தாண்டு மார்ச் மாதம் துவக்கத்திலேயே தீப்பிடித்து எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து அரியமங்கலம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags : firefighters ,
× RELATED மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட...