×

ரவுண்டானா பணி இழுத்தடிப்பு லால்குடி பஸ் ஸ்டாண்டில் புழுதியால் தொடரும் விபத்துக்கள் கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியம்

லால்குடி, மார்ச் 7: லால்குடியில் ரவுண்டானா பணிகளை முடிக்காததால் பஸ்நிலையத்தில் புழுதிபுகையால் விபத்துக்கள் நிகழ்வதாகவும், கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம், லால்குடியில் 2010ம் ஆண்டு ரயில்வே மேம்பாலப் பணிகள்  தொடங்கப்பட்டு  2016ம் ஆண்டு முடிவடைந்தது. மேம்பாலம் இன்னும் திறக்கப்படவில்லை.  ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.  இதனால்  ரவுண்டானா பகுதியை சுற்றியுள்ள கடை உரிமையாளர்களும், பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 2017 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்ததை அடுத்து உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரவுண்டானா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ரவுண்டானாவை கடந்து செல்லும் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் குண்டும் குழிகளாலும், ரவுண்டானாவை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மேம்பால பணிகளையும், ரவுண்டானா பணிகளையும், ரயில்வே சுரங்கப்பாதை பணிகளையும் விரைந்து முடிக்ககோரி லால்குடி பகுதி சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலெக்டர் மற்றும் லால்குடி கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

கடந்த பிப்ரவரி 21ம் தேதி மாவட்ட கலெக்டர் சிவராசு லால்குடிக்கு வருகை தந்து ரவுண்டானா பணிகளையும், புதிய மேம்பாலம் இன்னும் திறக்கப்படாத நிலையில் அதில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மற்றும் பழுதுகளை பார்வையிட்டார். மேலும், ரயில்வே சுரங்க பாதையையும் ஆய்வு செய்தார். அப்போது ஏன் இன்னும் ரவுண்டானா பணிகள் முடிக்கப்படவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் ரயில்வே சுரங்கப்பாதையில் இரண்டு இடங்களில் நீர் ஊற்று வருவதை பார்வையிட்டு உடனடியாக 10 தினங்களுக்குள் சுரங்கப்பாதை பணிகளையும், ரவுண்டானா பணிகளையும் முடிக்க கோட்டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் கலெக்டர் உத்தரவிட்டும் இதுவரை பணிகளும் நடைபெறவில்லை. தினமும் ரவுண்டானாவை பஸ்கள் மற்றும் லாரிகளுக்கு பின்னால் மொபட்டுகளில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் புழுதியால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். புழுதியால் 10 க்கும் மேற்ப்பட்டோர் வாகன விபத்து ஏற்பட்டு திருச்சி, தஞ்சை, லால்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பால பணிகளும், ரவுண்டானா பணிகளும் இன்னும் முடிக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்வது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, லால்குடியில் 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் பாலம் தொடங்கப்பட்டது.

மேலும் லால்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 3 சட்டமன்ற தேர்தலில் திமுகவே வெற்றிபெற்று திமுக கைசவமே தொகுதி உள்ளதாலும், லால்குடியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம், கிளை நீதிமன்றம் கட்டிடம், தீயணைப்பு நிலையம் கட்டிடம் மற்றும் அரசு திட்டங்கள் ஆமை வேகத்தில் முடிக்கப்படாமல் உள்ளது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதாலே ஆளும் கட்சியினரால் மேம்பாலம் முறையாக திறக்கப்படாமலும், ரவுண்டானாவும் பணிகளை முடிக்கப்படடாமல் உள்ளது என கூறி வருகின்றனர். இதுகுறித்து ரவுண்டா பகுதி வியாபாரிகள் கூறுகையில், லால்குடியில் ரவுண்டானாவை சுற்றிச் செல்லும் வாகனங்களால் புழுதி கிளம்புவதால் கடைளுக்கு பொதுமக்கள் வருகை குறைந்துவிட்டது.  இந்த புழுதியால் ரவுண்டானா பகுதி மட்டுமல்லாது பஸ் நிலையத்திலும் எந்த கடையும் திறக்க முடியவில்லை. இதனால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் ரவுண்டானா பகுதிலிருந்து அரியலூர், அன்பில், தஞ்சாவூர் மற்றும் திருச்சி செல்லும் வழிகள் தெரியாமல்  தடுமாறி வருகின்றனர். வழிகாட்டும் பெர் பலகைகள் அமைக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : Roundabout workshop ,bus stand ,Lalgudi ,accidents ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை