×

கொடைக்கானல் வில்பட்டியில் விதிமீறிய 405 கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி துவங்கியது

கொடைக்கானல்: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் விதிமீறிய 405 கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி துவங்கியது. கொடைக்கானல் நகராட்சி பகுதியில் அனுமதியற்ற, விதிமீறிய வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் கடந்த 7 நாட்களாக 230 விதிமீறிய வணிக கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. இதேபோல் கொடைக்கானல் ஊராட்சி பகுதிகளில் அனுமதியற்ற, விதிமீறிய வணிக கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி வில்பட்டி ஊராட்சிக்குப்பட்ட பேத்துப்பாறை, வில்பட்டி, பள்ளப்பட்டி, பெரும்பள்ளம், சின்ன பள்ளம், குறிஞ்சி நகர், குறிஞ்சி ஆண்டவர் கோயில் பின்புறம் உள்ள பகுதிகளில் வணிக பயன்பாட்டில் உள்ள விதிமீறிய 405 கட்டிடங்களுக்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் குழுவினருடன் இக்கட்டிடங்களை அளந்து எந்த அளவிற்கு விதிமுறை மீறப்பட்டுள்ளது என கண்டறிந்து பட்டியல் தயாரித்தனர். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜன் தலைமையில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ, தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட குழுவினர் வில்பட்டி ஊராட்சி பகுதியில் விதிமீறிய வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை துவங்கினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஐகோர்ட் உத்தவுப்படி முதல்கட்டமாக வில்பட்டி ஊராட்சியில் 405 வணிக கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டது கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தற்போது இக்கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை துவங்கியுள்ளோம். முதல் நாளில் 10 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன’ என்றனர்.

Tags : buildings ,Kodaikanal Wilpiti ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...