×

திருமலைராயன்பட்டினம் அரசு பெண்கள் பள்ளியில் நடமாடும் புத்தக கண்காட்சி

காரைக்கால், மார்ச் 7:  காரைக்கால் மாவட்ட கல்வித் துறையின்கீழ் இயக்கும் சமக்கிரகா சிக்ஷா, நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவுடன்  இணைந்து 4 நாட்கள் நடைபெறும் நடமாடும் புத்தகக் கண்காட்சி நேற்று முன்தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் தொடங்கியது.இந்த கண்காட்சியை, மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் தொடங்கி வைத்தார். முதன்மைக் கல்வி அதிகாரி அல்லி, வட்ட துணை ஆய்வாளர்கள் கார்த்திகேசன், கண்மணி உள்ளிட்ட கல்வித் துறையினர் கலந்து கொண்டனர். பேருந்துக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சியில், அரசுப் பள்ளிகளுக்கான பல்வேறு தலைப்புகளில் சிறந்த புத்தகங்களும், குழந்தைகளுக்கான இதர புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. 2ம் நாள் நிகழ்ச்சியாக, காரைக்கால் திருமலைராயன்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். 3ம் நாள் நிகழ்ச்சியாக, இன்று (7ம் தேதி) காரைக்கால் நெடுங்காடு அரசு தொடக்கப் பள்ளி வளாகத்திலும், நாளை (8ம்தேதி) மீண்டும் காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்திலும் இக்கண்காட்சி நடைபெற உள்ளது.

கண்காட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், புத்தகத்தின் விலையில் 25 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுவதாகவும், அரசு பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில், பள்ளி நூலகத்துக்கு தேவையான நூல்கள் வாங்கப்படுகிறது. அந்தந்த பகுதியில் கண்காட்சி பேருந்து நிறுத்தப்படும்போது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Thirumalaiyirappattinam Government Girls' School Book Fair ,
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்