×

கரூர் பகுதியில் குழாய் உடைப்பு, கசிவால் குடிநீர் வீணாகும் அவலம்

கரூர், மார்ச் 7: கரூர் வடக்கு காந்தி கிராமத்தில் குழாய் கசிவினால் குடிநீர் வீணாகி வருகிறது. கரூர் வடக்கு காந்தி கிராமத்தில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் பீச்சியடிக்கப்பட்டு வீணாகி வருகிறது. அப்பகுதி முழுவதும் குடிநீர் வழிந்தோடி வீணாகிக் கொண்டிருக்கிறது. கடும் வெயில் தொடங்கியிருப்பதையடுத்து குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபோன்ற காலங்களில் குடிநீரை வீணாக்காமல் குடிநீர் குழாய் உடைப்பு, கசிவு போன்றவற்றை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் தாந்தோணிமலை வட்டார போக்குவரத்து  அலுவலகம் அருகே ஆயுதப்படை பிரிவு வளாகம் செல்லும் சாலை உள்ளது. இந்த  சாலையின் நுழைவு வாயில் பகுதியில் கடந்த சில நாட்களாக கேட்வால்வில் ஏற்பட்ட  உடைப்பு காரணமாக  தண்ணீர் கசிவு ஏற்பட்டு குளம் போல  தேங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குடிநீர்  சீரமைப்புக்காக இந்த பகுதியில் பள்ளம் தோண்டியபோது, ஏற்பட்ட பிரச்னையை  சரிவர தீர்க்கப்படாத காரணத்தினால் தற்போது கேட்வால்வு வழியாக தண்ணீர் கசிவு  ஏற்பட்டுள்ளதாக இந்த பகுதியினர் கூறுகின்றனர்.

கடந்த பல நாட்களாக இந்த  கசிவு காரணமாக ஏராளமான குடிநீர் வீணாகி வருகிறது. கரூரில் தற்போது  சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதக்கி வரும் நிலையில், இதுபோல தண்ணீர்  வீணாவதை தடுத்து நிறுத்தும் வகையில் தேவையான சீரமைப்பு ஏற்பாடுகளை  அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கரூர் சிந்தலவாடி பிரிவு சாலையில் குழாய் உடைப்பினால் குடிநீர் வீணாகி வருகிறது. சிந்தலவாடி பிரிவு சாலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டக்குழாய் உடைந்தது. இதனால் குடிநீர் வெளியேறி வயலுக்கு சென்றது. சிந்தலவாடி காவிரியாற்றில் இருந்து தண்ணீர் மதுரை மாவட்டம் மேலூர் வரை செல்ல குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குழாய் உடைப்பினை சரி செய்யாததால் அறுவடை செய்த வயலில் நீர் தேங்கி நின்றது. கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் குழாய் உடைப்பினை உடனுக்குடன் சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : area ,Karur ,water leakage ,leakage ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்